
கும்பிடு போட்ட வார்த்தைகள்
கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்க,
கூப்பாடு போட்ட வார்த்தைகளெல்லாம்
கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தன,
ஆசை காட்டிய வார்த்தைகள்
அரியணைகளை பறித்துக் கொண்டன,
நியாயம் பேசும் வார்த்தைகளெல்லாம்
நியாயமான வார்த்தைகள் இல்லையென்று
உண்மை பேசும் வார்த்தைகள்
சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டன,
வார்த்தைகளை விற்ற கவிஞன்
வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்,
வார்த்தைகளை விட்டவர்கள்
வாட்டத்தோடு முடங்கிக் கிடக்கிறார்கள்,
வார்த்தைகளைத் தொலைத்தவர்கள்
மௌனம் தாக்கி மயங்கிக் கிடக்க,
காதல் வார்த்தைகளை பேசியொருவன்
கவிழ்ந்து கிடக்கிறான் காமத்தின் மடியில்,
வார்த்தைகளின் வித்தைகளில்
வளையத் தெரியாதவன்
போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து
வார்த்தைகளைப் பொறுக்கி கொண்டிருக்கிறான்,
வாழ்ந்து முடித்த கதையிவனென்று
அங்கு உட்கார்ந்திருந்த காகம்
வார்த்தையொன்றை உதிர்த்துவிட்டுப் பறக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment