
நிழலை
நூற்றுக் கொண்டிருந்த கிழவியிடம்
ஏதோ ஓர் அமானுஷ்யம் இருப்பதாகவே
எல்லோரும் பயந்தார்கள்,
வாய்ப் பந்தலில்
வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்,
அவளை எல்லோரும்
மோஷிக் கிழவி என்றே அழைத்தார்கள்,
அவள் நிர்ணயித்த பஞ்சணை அறைக்கு
சுவர்க்கம் என்று பெயரிட்டாள்,
அதனுள் ஆசையாய் நுழைந்தவர்கள்
எலும்புக் குவியல்களாகத்தான்
குப்பையில் விழுந்து கிடந்தார்கள்,
பிணங்களை எழுப்புவதாகச் சொன்னவள்
இடு காட்டில்
பிணங்களைச் சுட்டு தின்னுக் கொண்டிருந்தாள்,
மோஷிக் கிழவி இறந்து விட்டாளென
பறை பறை சாற்றியது,
எல்லோரும் அங்குக் கூடினார்கள்,
சதை பிண்டமாய் கிடந்த அவளருகில்
அவளின் கறியை சீரணிக்காத
ஓநாயும் ஒன்று இறந்து கிடந்தது,
அதுதான் அவளை சாகடித்ததாக வணங்கினார்கள்
அங்குக் கோயிலொன்று உருவானது...
மோஷிக் காவியம் எழுதியவர்கள்...
அவளை மீண்டும் புனிதமாக்கினார்கள்,
அங்குதான் மோஷிக் கிழவி
அமானுஷ்யங்களைக் காட்டி
மீண்டும் குறிச் சொல்லத் தொடங்கினாள்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment