
விழிகளைப் பொத்திக் கொள்ளுங்கள்
எதுவுமிங்கு
நீங்கள் பார்ப்பது போல் நடப்பதில்லை
வாய்களைத் திறந்தால்
வார்த்தைகளை வைத்திருந்ததாக
நீங்கள் கைது செய்யப் படுவீர்கள்,
கேட்கும் மொழிகள் அரசுக்கு எதிரானால்
செவிடாக்கும் உரிமையை
காவல்துறை கண்ணியத்துடன் பாதுகாக்கும்,
நடக்கும் கால்கள்
வீட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும்,
கைகளை உயர்த்தும் போது
சோம்பல் நீக்கத்தான் என்றாலும்
அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளுங்கள்,
குண்டாஸென்ற பொது வழக்கு
உங்கள்மீதும் பாயக்கூடும்,
தலைகளை ஆட்டவும்,
கைகளைத் தட்டவும் கற்றுக் கொண்டால்
கவலையில்லை...
நீங்கள்தான்
உண்மையான இந்தியர் என்ற முத்திரை
ஆழமாகக் குத்தப் படும்...
அடுப்பில்
சோறில்லையென்றாலும் கவலைப் படாதீர்கள்,
போராடுவது உங்களுக்குத் தடுக்கப் பட்டிருக்கிறது,
உயிரைவிடவா பசி அத்தினை பெரியது?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment