
வஃபாத்தாகி விட்டதாக
உறவுகள் கூடி அழுகின்றது...
அல்லது
அழுவதாய் நடிக்கின்றது,
புதைக் குழி
தோண்டி விட்டார்கள் ...
இது போன்ற குழிகளை
இவனும்
அடிக்கடிப் பார்த்தவன் தான் !
இதுதான்
இவனுக்கு இறுதிக் குழி ,
இனி யாரும் இவனுக்கு
பள்ளம் தோண்ட மாட்டார்கள்,
சந்தூக்கின் பாரம்
சற்று அதிகம் தான் ,
ஆசைகள் மிச்சமிருக்கின்றது
அதுதான் கனக்கின்றதாம்,
விட்ட சொத்தில்
ஏதாவது தேறுமாயென்று
கணக்குப் போட்டவனின்
தடித்த வார்த்தை ,
மூக்கி னோரம் வழிந்த
உதிரக் கரைசலில்
மூக்கைப் பொத்தி நிற்கிறான்
மூத்த மகன் ,
துக்கங்களைச் சுமந்து தான்
மூடுகிறார்கள்
குழியை... பிள்ளைகள் ,
விசும்பலும் அழுகையும்
மூன்றாம் நாளில்
எல்லாம் ஒருசேர முடிந்துவிடும்,
துவாக்களின் நேசத்தில்
ஆமின்கள் இங்கு
சற்று அதிகம் தான் ,
ஆசைகளைச் சுமந்த
அடுத்த மய்யத்துகள்
"இதுதான் வாழ்க்கை" யென்று
தத்துவம் பேசி கலைகின்றது..
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment