Sunday, 16 July 2017

காதல் குருடு

blind love modern painting க்கான பட முடிவு

உன்னையும் என்னையும் இணைக்கும் 
இந்தக் கவிதை மிகவும் சிக்கலானது, 
காதலென்ற நூலிழைப் பாலத்தில் 
இப்போது நடந்து கொண்டிருக்கிறோம், 
அஃது எப்போதும் அறுந்து விழலாம், 
ஒரு கவிதையில் படித்திருக்கிறேன் 
காதல் மோசமான வார்த்தையென்று, 
பாலம் அறுந்ததால் விழுந்தவன் 
பரிதவித்து எழுதிய வார்த்தையாக இருக்கலாம், 
என் காதலும் சுய நலம் பூத்துத்தான் 
உன்னைச் சுவாசிக்கிறது, 
மன நிறைவை நீ மட்டும் எட்டிவிடவாப் போகிறாய் 
பாலை வனத்தில் நடந்து கொண்டே 
பூப் பறிப்பதாகப் பொய்ச் சொல்லுகிறோம், 
காதலின் முதல் பாதிப்பு கண்களென்று 
பாரசீக கவிதையொன்று சொல்கிறது, 
இதயமும் சேர்ந்தல்லவா அழுகிப் போகிறது, 
நீயும் நானும், நானும் நீயும் என்பது 
ஒரு கட்டத்தில் 
நான் நான்தான், நீயோ என் போல் இல்லையென 
மாறிவிடுகின்றது, 
ஆனாலும் நாம் 
நம் காதலை பிடித்துக் கொண்டுதான் நடக்கிறோம், 
வேறு வழியில்லை 
நம் இருவர் கண்களுமே இப்போது குருடாகிவிட்டது. 

- மு.முகமது பாட்சா


No comments:

Post a Comment

Popular Posts