Tuesday, 25 July 2017

தலைப்பு மட்டும்தான்



Related image

தொலைக் காட்சிப் பெட்டி 
உறங்கிக் கொண்டிருக்க 
ஒரு பியானோவின் மெல்லிசை 
என்னை எழுப்புகிறது... 
இந்த இனிய இசையை 
இதுவரை நான் கேட்டதில்லை, 
எட்டாவது அதிசயமாக இருக்கலாம், 
கதவைத் திறந்து வெளியேறுகிறேன், 
காற்று என்னை 
கைப் பிடித்து அழைத்துச் செல்கிறது... 
உயரமான மனிதர்கள் 
நிர்வாணமாய் நடந்து கொண்டிருக்க, 
விசித்திரமான மிருகங்கள் 
விசித்திரமாகப் பார்த்து விட்டு நகர்கின்றன... 
வியர்க்கத்தான் செய்கிறது 
மேகத்தையெடுத்து 
முகம் துடைத்துக் கொள்கிறேன், 
நான் பழகிய வாசனையை 
இப்போதும் என்னால் நுகர முடிகிறது... 
ஆம் சந்தேகமேயில்லை 
அங்கு நீதான் இருக்கிறாய்... 
நீர் வீழ்ச்சியை மெத்தையாக்கும் வித்தை 
உனக்கு மட்டும்தானே தெரியும்... 
உன்னை யார் இங்குக் கடத்தி வந்தது? 
இல்லை, 
நீதான் என்னைக் கடத்தியிருக்க வேண்டும், 
ஒரேயொரு கவிதை எழுதிக் கொள்கிறேன், 
நீ பசியாறும் முன்பாக 
என் பசி தீர்வதும் உரிமையல்லவா... 
இஃது என்ன கவிதையென்று 
சிலர் முனங்கி விட்டுப் போகிறார்கள்.... 
போனால் போகட்டும், 
இது தலைப்பு மட்டும்தான் என்று , 
நான் 
அவர்களுக்கு எப்படி விளங்க வைக்க முடியும்...? 
ஆக்கிரமிக்கத் தொடங்கி விடு 
பியானோவின் இசை மெல்லத் தேய்கிறது..... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts