
நானென்பது
நானாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை
என் உறவுகளாகவும் கூட இருக்கலாம்
என்னை நான்
எப்போதும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்
என்னை நானே வசை பாடுவதற்கும்
சந்தர்ப்பங்கள் எளிதாக அமைந்து விடுகின்றன,
நான் விழுந்த நொடிகளில் தூக்கிய கைகள்
நிச்சயமாக எனது கிடையாது
என் சுவர்களின் பக்கங்களில் சொகுசாக
சாய்ந்து உறங்கிக் கொள்கிறேன்,
சுவரையும் இடித்து நான்தான் தரை மட்டமாக்குகிறேன்,
கற்பனைச் சுவர்களில் வெள்ளையடித்துவிட்டு
கறுப்பு வண்ணம் பூசிக் கண்ணீர் வடிக்கிறேன்
விரிசலில் துளிர்த்த ஆலமரச் செடியை
போதி மரமாய் நினைத்துக் காற்றும் வீசுகிறேன்,
என் மௌனத்தோடு பேசிக் கொண்டிருப்பதை
யாரும் பார்த்து விடாதீர்கள்...
பைத்தியமென்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்,
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment