Thursday, 22 June 2017

கடவுள்கள் விற்பனைக்கு

Image may contain: water

கடை வீதியின் கடையிலோர் 
கடவுள்களை 
விலைக்கு வாங்கப் போனேன்,
விதவிதமாகக் கடவுளர்கள் 
வித்தியாசமான விலைகளில்,
சாத்தானும் 
விற்பனைக்கிருக்கிறான்,
செய்வினைக் கர்த்தாக்களுக்கு 
தேவைப் படுவானாம், 
குபேரனும் சிரிக்கும் புத்தரும்தான் 
விலையதிகம்,
செல்வம் கொடுப்பவர்களாம் ,
குபேரன் வட்டிக்குதானே 
பணம் கொடுப்பான்...? 
வாங்கும் விலைகளில் 
எந்தக் கடவுள்களும் காட்சியில் இல்லை,
வசதிதாரர்களுக்கு
மட்டுமே கடவுள் போலும்,
அங்கேயே ஆடித் தொட்டி யொன்றில் 
அழகானதாய்ச் சுற்றும் ஒற்றை மீன் 
ஒரு லட்சம் ரூபாயாம் ! 
வசதி தருவதற்காக வாஸ்துவானதாம்,
கடவுள்களை வாங்கினால் போதுமே 
ஐசுவரியம் தானாக வராதா? 
கடைக்காரன் இளக்காரமாய்ச் சிரிக்கிறான்,
கடவுள்களை வேண்டித் தரிசனம் கண்டு 
காரியம் வாங்கும் முன்பு 
ஆயுள் காரியம் முடிந்து விடுமாம்....
அப்படியும் இருக்கலாம் ,
கடவுள்களின் சக்திகளும் 
இப்போது கடைகளின் விற்பனையில், 
சரி ! திருஷ்டியாவது போகட்டுமென 
ஒற்றை ரூபாய்க்கு 
கருப்புக் கயிற்றை வாங்கிச் செல்கிறேன்,
விற்பவன் காது பட விமர்சிக்கிறான்...
அல்லது சபிக்கிறான்... 
"சாவுக் கிராக்கி காலங்கார்த்தால 
வந்து நமக்கென வாய்க்கிதுப் பார்,
தூங்கியெழுந்த மூஞ்சி சரியில்ல " 
காலையிலெழுந்தவுடன் அவனும் 
கடவுளின் முகத்தில்தானே விழித்திருப்பான் !

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts