Sunday, 4 June 2017

தப்சுடன் ரமழான்



ஷாஃபான் பிறையும் 
விடைப் பெற்றுப் போக 
மூன்றாம் பிறையின் 
இளம் முறுவலைப் பார்த்து 
முகம் காட்டும் புனித ரமழான்! 
அழைப்பின் ஓசைக்குபின் 
நிரம்பிய பள்ளிகளில் 
பாங்கில் அழைக்கும் முன்பே 
வழியும் காட்சிகள்! 
தராவிஹ் தொழுகைகளில் 
தாராளம் காட்டும் 
குர் ஆனும், திக்ருக்களும்! 
தஸ்பிமணிகளின் உருட்டல்களில் 
சாத்தான் அரண்டு போகிறான்! 
அடிமைப்பட்ட ஆதமின் மக்களை 
ஆண்டவன் காத்திடுவானோ! 
கலக்கத்தில் கண்ணீருடன் இப்லீஷ்! 
தூக்கம் தொலைத்தத் 
தொண்டர்களின் நெகிழ்வில் இறைவன்! 
பசித்துப் புசிக்க 
அத்தனை பேருக்கும் ஆசை! 
சஹருக்கிற் கெழுப்பும் 
பக்கீர்களின் தப்ஸீன் ஓசைகள்! 
பசித்தவர்களின் வயிற்றிற்காக 
நோன்பைத் திறந்தபின் 
புசிப்பதற்காய்க் காத்திருக்கும் 
சுவை மிகு உணவுகள்! 
அத்தர் மணம் வீசும் 
அழகிய லைலத்துல் கத்ர்! 
மிஷ்கின்கள் கைகளிலும் 
தாராளப் பணப் புழக்கம்! 
ஏழைகளுக்கென்று அள்ளிவழங்க 
காத்திருக்கும் கஜானாக்கள்! 
பள்ளிகளும் போகாதே 
என்று புலம்பும் கடைசி நோன்பு! 
தப்பறைத் தவிர்த்த 
வளமிகு முப்பது நாட்கள்! 
தொழுகைகளின் சிறப்பில் 
மகிழ்வினில் சிரித்துடும் 
மான்பைப் பேசிடும் புனித ரமழான்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts