
காதலில்லாத மனிதனைப் பார்த்து
சிரித்தார்... அந்தச் சூஃபிக் கிழவன்,
கவலையுடன் அவரைப் பார்த்தான்,
இறக்கவேண்டிய இடத்தில் இறக்காமல்
சுமைகளை
தூக்கியே திரிகிறாயே என்றார்,
இறங்க மறுக்கிறதென்றான்,
தூக்கிச் சுமப்பவன்தான் இறக்க வேண்டும்,
கவலையிடம் காரணம் கேட்டால்
பொய்தான் சொல்லும்..,
சிரித்தவர் மீண்டும் சொன்னார்,
நீயொரு காதலிக்கத் தெரியாத முட்டாளென்று,
காதலிருந்தால்
கவலைகள் போகும் என்றார்...
ஆசைகளைக் காதலித்தேன் என்றான்...
கானல் நீரைக் குடித்தேன் என்கிறாயே
என்று நகைத்தார்...
மனைவியைக் காதலி, குடும்பத்தைக் காதலி,
வாழ்க்கையைக் காதலி, வனத்தைக் காதலி,
அழகினைக் காதலி, எல்லையில்லாத காதலை
எப்போதும் காதலி !
நான் இறைவனைக் காதலித்தேனே? என்றான்
அடங்காமல் சிரித்தவர்
அவன் படைப்புகளை நீ காதலித்தாயா?
என்று கேட்டுவிட்டு நகர்ந்தார்....
மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது
அவனது கவலைகள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment