
மெளனம்
விலைக்கு விற்கப் படுவதாகச்
சொன்னார்கள்!
வரிசையில்
காத்து நின்றதுக் கூட்டம்!
விற்பவர்
காவியுடையில் காட்சித் தருகிறார்!
முற்றும் துறந்தவரென்று
ஒருவன் சொன்னான்!
தங்கப் பூணணிந்த உத்திராட்சையில்
கழுத்தலங்காரம்!
காவியில் மெல்லியதாய்
தங்கச் சரிகை!
ஆசனமோ
மன்னரும் அமராத வேலைப்பாடு!
அருகிலோர் பக்தக் கன்னிகை!
ஆம்! அவர் முற்றும் துறந்தவராம்!
அமைதிக் கொட்டிக் கிடந்தது
சுகந்த வாசனைகளுடன்!
மெல்லக் கண் விழிக்கிறார்
ஆஹா!
சிலிர்க்கிறது பக்தக் கோஷங்கள்!
புன்னகையில்
புத்தன் தோற்றுப் போனான்!
ஸ்லோகத்தைத் தூவி விடுகிறது
அவரது வாய் மொழி!
கிளிப் பிள்ளைகள்
திருப்பிச் சொல்கின்றன!
கண்களை மூடச் சொல்லி உத்தரவு!
எல்லாப் பூனைகளும்
கண்களை மூடிக் கொண்டன...
ஆனந்த யோகியும் பக்தச் சிஷ்யையும்...
கட்டிப் பிடித்துக் காம ஆலிங்கணத்தில்!
கண் கட்டிய பூனைகள்
சொர்கத்தில்
அமைதியைத் தேடிக் கொண்டு!
கண்திறக்க உத்தரவு!
இன்று பிறந்த குழந்தைகள்
மெல்லக் கண் திறக்கின்றன !
இப்போது
சிஷ்யர்கள் தரிசன வரிசையில்!
கக்கித் தருகிறார் கடவுள்களை
நாற்றம் பிடித்த வாயிலிருந்தும்,
கக்கத்தி னிடையிலிருந்தும்!
அதிசயத்தில் வாய்ப் பிளக்கிறது
அமைதியை
விலைக்கு வாங்க வந்த
அறிவாளிக் கூட்டங்கள்!
ஆனந்தம்
யோகத்திற்குள் போகப் போகிறதாம்...
கூடாரத்திற்குள் கூடவே நுழைகிறாள்
முற்றும் துறக்க போக சிஷ்யை,
மெளனம் சிதைந்து நிற்கிறது....
யோகாவின் அந்த ஆனந்த மடத்தில்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment