பதினான்கு வயதில் ஒரு மாணவன் அரசியலுக்குள் நுழைகிறான். சமூக அவலங்கள் அவன் கண்களை உறுத்துகிறது... ஏதாவதொன்று செய்யவேண்டும், அதைப் பற்றி மக்களிடமாவது வெளியுலகில் பேசவேண்டும் எனத் துடிக்கிறான்.அவன் அப்போது தேர்ந்தெடுத்த ஒரு சிறு ஆயுதம்தான் பேனா ! வால்ட்டரின் வரிகள் அவனுக்கு நன்றாகவே தெரியும் 'சமூகத்தை மாற்றப் பேனாவைப் போல் ஒரு சிறந்த ஆயுதம் எதுவுமேயில்லை'
பணமும் இல்லாத, சமூக அந்தஸ்தும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த அந்த ஏழைச் சிறுவன் என்ன செய்வான்? அவனே ஒரு கையெழுத்துப் பிரதியைத் தொடங்குகிறான். நண்பர்களும் அவனும் கைகளாலேயே எழுதி, சுற்றுப் பதிப்பில் தங்களை மெருகேற்றிக் கொள்கிறார்கள். பத்திரிக்கையின் பெயர் 'மாணவ நேசன்' அதுதான் பின் நாளில் முரசொலியாக உருபெற்று, சமீப காலம் வரை ஓய்வில்லாமல் அவனது எழுத்துகளைத் தாங்கி ஒரு பெரும் சகாப்தமாய் இன்னமும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்தத் தன்மான மாணவன்தான், தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அரசியல் வாழ்வில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த அந்தத் தலைவனுக்கு , வைரவிழா கொண்டாடும் நாம், அவரது பத்திரிக்கை வாழ்க்கையின் 80 ஆண்டுகளையும் பதிவு செய்து பார்க்கவேண்டும். கவிக்கோ அப்துல்ரகுமான் சொன்னது போல் இரவிலும் உறங்காத ஞாயிறு அவர்.
அவர் எழுதும் ' என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பே ' எனத்தொடங்கும் கடிதங்களைப் படித்துத் தங்களை உத்வேக படுத்திக் கொண்ட தொண்டர்கள்தான் அவருக்கு அதிகம். அவருக்கு ஒன்றென்றால் இப்போதும் துடித்துப் போகிறார்கள். அந்தத் தலைவனின் அரசியல் வாழ்க்கையின் வைரவிழாவை தங்கள்வீட்டு விழாவாக அவர்கள் கொண்டாடுவதில் எந்த வியப்புமில்லை.
அவரின் மாணவப் பருவத்தில் நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சுகளால் கவரப்படுகிறார், அவரை அரசியலுக்கு இழுத்து வந்ததும் அவரது பேச்சுகளால்தான் என்பதை அவரே சில சந்தர்ப்பங்களில் வெளிப் படுத்தியுள்ளார். அதனால்தான், தன் மகன்களில் ஒருவருக்கு அழகிரி என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
திரைப்படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பெரும் தாக்கத்தைச் சமூகத்திலும் விளைவித்தது.பெண் என்பவள் கணவனை, 'ஸ்வாமி, நாதா' என்றும் ஆணின் அடிமையாகவும் சித்தரித்து வந்த அந்தக் கால கட்டத்தில் அறிஞர் அண்ணா, திருவாரூர் தங்கராசு போன்றவர்கள் எதார்த்த மக்கள் மொழியில் சமூகச் சிந்தனையுள்ள வசனங்களைப் புரட்சிகரமாக எழுதத் தொடங்கினார்கள்.இவர்களின், இந்தச் சினிமா மொழி வெகுஜன மக்களின் மொழியாகவும், சிந்திக்க வசதியாகவும் இருந்ததால் மக்களை உடனடியாகச் சென்றடைந்தது
இவர்களின் வரிசையில் கலைஞரும் கை கோர்த்து நின்றார், இவரது வசனங்கள் அடித் தட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. இவரது வசனங்களுக்காகவே படம் ஓடுகின்ற சூழலும் வந்தது. நாடகங்கள் மூலமாக இவர் வந்ததால் வெகுஜன மக்களின் பார்வையில் இவரால் அழகிய தமிழில் எழுத முடிந்தது.
நாம் திரைப்படத்தின் மூலமாக, அரசியலில் அவருக்குப் பிடித்த கம்யூனிச சித்தாந்த வசனங்களை நுழைத்தார்,
- "என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?"
- "ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை"
பண்ணையாருக்கும் தொழிலாளிக்கும் இடையிலான வசனத்தில். அரிவாள் என்பதைக் கம்யூனிச இயக்கத்தின் சின்னமாகச் சித்தரித்திருப்பார்.
வசனங்கள் மற்றும் தனது படைப்புகள் மூலமாக, விதவை மறுமணம், ஜமீன்தாரி முறை ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சுயமரியாதை மற்றும் சமூகசிந்தனைகளைப் பரப்பினார்.
பராசக்தி படத்தில், மூன்று காலங்களின் அவலத்தை ," ஓடினாள்...ஓடினாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்" என்ற வசனத்தின் மூலம் சொல்லியிருப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உச்சரிப்புகளால் கலைஞரின் வசனம் மேலும் மெருகேற்றிக் கொண்டது.
- "டேய்.. நீ பிக்பாக்கெட்டா?"
- "இல்லை.. எம்ப்ட்டி பாக்கெட்"
- "ஏண்டா.. முழிக்கிறே?"
- "தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?" போன்ற நக்கல் மொழி அவர் வசனங்களில் அவலங்களைத் தோலுரித்தது.
வழிப்பாட்டு உரிமையை வைத்துக் கொண்டு அத்து மீறுவதை எதிர்த்தார். இதை அழகாகப் பராசக்தியில், - "கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என்றும் , "அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்ற கேள்வியும் இன்றும் உயிர்ப்புள்ள வசனங்களாகவே இருக்கின்றன.
அரசியலில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களையும் அவர் சந்திக்கத் தயங்கியதேயில்லை. பத்திரிக்கையாளர்களின் மீது மிகுந்த அன்பும் நட்பும் பாராட்டி வருபவர், இன்னல்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை. அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை மட்டுமே சிந்திப்பவர். அதனால்தான் மிசாக் காலங்களில் துணிந்து எழுதிக் கொண்டே இந்திராவையும் கடுமையாக எதிர்த்தார்.
ஈழப் போராளிகள் விசயத்தில் அவர் மீது இப்போது கட்டமைக்கப் பட்டிருக்கிற பிம்பம் கூட ,அவரை ஒழிக்க நினைக்கும் சத்திரிய எதிரிகளால் கட்டமைக்கப் பட்ட ஒன்றுதான். உண்மையில் அவர் ,ஈழப் போராளிகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஈழப் போராளியான சிறீ சபாரத்தினம் நினைவாகவே தனது பாலைவன ரோஜாக்கள் படத்தில் கதாநாயகனுக்குச் சபாரத்தினம் என்றும், காவலுக்குக் கெட்டிக்காரன் படத்தில் தியாகி திலீபன் நினைவாக நாயகனுக்குத் திலீபன் என்றும் பெயர் வைத்தார். ராஜிவ் காந்தி படுகொலையின் போது ,திமுக தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதென்று அவர்களது உடைமைகள் அடித்து நொறுக்கப் பட்டன.
இந்தியாவிலேயே மனிதனை மனிதன் இழுக்கும் கொடுமையை முதலில் இவர்தான் ஒழித்தார். அவர்களுக்கு மாற்றாக இலவச கை ரிக்ஷாக்கள் வழங்கினார். ஒரு ரூபாயிக்கு ஒரு படி அரிசி ஏழைகளுக்கு வழங்கப் பட்டது. விதவைகளுக்குத் தையல்மெஷின் கொடுக்கப் பட்டது. அவர்கள் வழங்கிய ஒவ்வொரு இலவசத்திலும் ஏழைகளுக்கான சமூக நீதி எப்போதும் வாழ்ந்து கொண்டிருந்தன.
அதனால்தான் இன்றளவிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சமூக நீதியில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது. அதற்கு வித்திட்ட தலைவர்களில் ஒருவராக,
தமிழக மக்களின் அதீத அன்பைப் பெற்றவராகவும் கலைஞர் இன்றளவிலும் திகழ்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
அவர் மேலும் சில ஆண்டுகளாவது நலத்துடன், நம்முடன் வாழ்ந்து தமிழகத்தின் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பது நம் எல்லோரின் ஆசையாகவும் இருக்கிறது.
தமிழின் பெருமைக்குத் தன்மான வாழ்த்துகள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment