Thursday, 1 June 2017

சென்னை சில்க்ஸ்

சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் நாசமாகப் போனது..பல நூறு கோடிகளுக்கான பொருட்கள் முற்றிலும் எரிந்துவிட்டது. நாம் எப்போதும் போலவே வேடிக்கை மனிதர்கள்தான். அவன் நாசமாகப் போகட்டும் என்பதில் கூடச் சிறு வயிற்றெரிச்சல் வெளிப்பட்டுப் புகைகிறது. அதில் வேலை செய்யும் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலைகளை இழந்துவிட்டார்கள். அந்தக்கடையை நம்பி சரக்குகளைக் கொடுத்த பல தொழிற் நிறுவனங்கள் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றன! 

இது சாதாரணமான சேதமேயில்லை. வலியும் வேதனையும் அவரவருக்கு வரும் போதுதான் உணர முடியும். இன்சூரன்ஸ் செய்திருப்பார்கள் என்ற ஒரு நிலை இருந்தாலும் சேதாரத்தின் அளவிற்கு இன்சூரன்ஸ் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படியே அந்தப் பணத்தைப் பெற வேண்டுமென்றால், இனி அதிகாரிகள் கொடுக்கும் குடைச்சலில் நிறுவனர் இன்னொரு தடவை செத்துதான் எழ வேண்டும். 

2007 ல் அந்தக் கடை, முறையான அனுமதியின்றிக் கட்டப் பட்டதாகச் சீல் வைத்தார்கள். பிறகு காசு எந்த அளவிற்குக் கை மாறியிருந்தால் தொடர்ந்து நடத்தியிருப்பார்கள் என்பது நமக்கே நன்றாக விளங்கும். 

சென்னை சில்க்ஸ் க்கான பட முடிவு

பணம் கொடுப்பது தவறுதானே ? என்ற கேள்வியெழுவது சரியென்று சொல்லும் போது பணம் வாங்குவதும் தவறுதானே ? என்ற கேள்வியை நாம் அமுக்கிதான் வாசிக்கிறோம்.10 ஆண்டுகளாக அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? 

தேர்தல் நேரத்தில் பணம் வாங்குவது தவறென்று வாதிடுவோம், பணம் கொடுப்பவர்களை ஹாயாக மறந்து விடுகிறோம். இந்த விவாகரத்திலும் பணம் கொடுப்பதைத் தவறென்று சொல்லிவிட்டு, பணம் வாங்கியவர்களை அழகாக மறந்துவிடுகிறோம். 

இந்தச் சிஷ்டம்தான் உதைக்கிறது. இதில் அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சாட்டுவது அரசியல் வாதிகளின் மீதுள்ள மன வெறுப்பென்று மட்டும்தான் சொல்ல முடியும். அதிகாரிகள் துணையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால் நாம் என்ன செய்கிறோம் ? அரசியல் வாதிகளை விமர்சிக்கும் அளவிற்கு எந்தவொரு அதிகாரிகளையும், வெளிச்சம் போட்டு காட்டுவதில்லை, ஏனென்றால் அதன் உள் கட்டமைப்பில், நம் உறவில் எவனோ ஒருவன் இருக்கவே செய்கிறான். 

ஊடகங்களும் கார்ப்ரேட் மயமாகிப் போனதால், எதைப் பேசினால் டி ஆர் பி எகிறும் என்பது மட்டுமே அவர்களுடைய நோக்கமாகிப் போனது. 

இந்த விவாகரத்தில் அரசியல் வாதிகளைக் குறை சொல்வதைவிட இந்த ஈன பொழப்பில் ஈடுபட்ட அதிகாரிகளைச் சஸ்பெண்ட் செய்துவிட்டு நடவடிக்கையைத் தொடங்கவேண்டும். அவர்களைப் படங்களுடன் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளும், சேதங்களும் நடக்காது. 

அதே சமயம் இந்த சம்பவத்தின் மூலம் மற்றுமொரு பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது. இந்த கடைக்கே இந்த நிலையென்றால், அணு உலை , மீத்தேன் போன்றவற்றால் விபத்து ஏற்பட்டால் நம் நிலமை என்ன ?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts