
ஒட்டகத்தின் பாதையில்
நடந்து போகிறேன்,
சுற்றிலும் மணற் காற்று
வீசிக் கொண்டிருக்கிறது,
புற்களாய் முளைத்த
கொத்து முட்கள்
கால்களைத் தைக்கின்றன,
உதிரத்தின் பாதைகளை
உனக்காக விட்டு வைத்திருக்கிறேன்,
உன் குரல்
என்னை விட்டுப் போக மறுக்கிறது...
என் குரல் உனக்குக் கேட்கிறதா ?
பிரியமே உனக்கு ஒன்று தெரியுமா ?
முல்லாவின் முசல்லாவை
மிதித்துவிட்டேனாம்,
கத்துகிறான்...என்னையே
மஜ்னூ என்று திட்டுகிறான்,
உன் காதல்தான்
என் கண்களைக் கட்டி விட்டதே !
அஃது அந்தப் பைத்தியத்திற்கு
எப்படித் தெரியும்?
அல்லாவை காதலிப்பதாய்ச் சொல்லுகிறான்,
அவனுக்கு மட்டும் ஏன்,
கண்களைக் காதல் கட்டவில்லை ?
லைலா ! அவன் குறையுள்ளவன் !
அல்லாஹ் அவனை மன்னிக்கட்டும்...
நீ எனக்காவே காத்திரு !
நான் எப்படியும்
உன்னை நிச்சயம் அடைந்துவிடுவேன்...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment