Monday, 12 June 2017

ஓநாய் மனிதன்

Image result for wolf face painting men painting
மனிதனாக மாறிய ஓநாயைத்தான் 
எல்லோரும் தேடிக் கொண்டிருந்தார்கள்... 
மனிதனொருவன் 
தத்துவம் பேசிக் கொண்டிருந்தான், 
வாய் பிளந்து நின்றது கூட்டம் 
கை விரல்களைக் கவிழ்த்தான் 
நதியொன்று பிரவகாமெடுத்தது, 
வாரிச் சுருட்டி 
சொம்புக்குள் அடைத்துக் கொண்டான், 
சுற்றிலும் வீசிய இரத்தக் கவிச்சியை 
முந்தைய ஆட்சியின் துர் நாற்றமென்றான், 
அவனது கைகளில் வழிந்த உதிரதிரவத்தை 
திரவக் குங்குமம் என்று பூசித்துக் கொண்டார்கள் 
ஆளுமைத் தந்தால் 
இன்னமும் அதிகம் செய்வேனென்றான், 
கூட்டம் கூடி நின்று பேசியது, 
கிரீடத்தை இடம் மாற்றினார்கள், 
அவனும் தன் உடையை மாற்றிக் கொண்டான், 
அரசன் 
இப்படித்தான் இருக்க வேண்டும் என்றான், 
நதியெங்கே ? என்று கேட்டது கூட்டம் 
விரல்களைக் கவிழ்த்தான் நதியோடியது 
ஆனால் கைகளுக்குள்தான் அகப்படவில்லை... 
அவன் காட்டியவிடத்தில் 
அவர்களுக்கான மாளிகைகள் இருந்தன 
மழையும் வெயிலும் உள்ளே பொழிந்தது... 
கூட்டம் இப்போதும் கூடி நின்று பேசியது... 
நீ யாரென்று ஒருவன் கேட்டான் 
தாமதமாய்க் கேட்டக் கேள்வியென்பதால் 
அவன் தலை தரையில் விழுந்தது, 
மற்றவர்கள் வாய்களைப் பூட்டிக் கொண்டார்கள் 
கூட்டத்தில் ஒருவன் இப்போதுதான் கவனித்தான் 
அவன் முகம் ஓநாயாக மாறியிருந்தது 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts