காதலை விரித்து வைத்தாய்
நானதில் சிக்கிக் கொண்டேன்...
போதையில் தடுமாறும் நதியை
பார்த்தாயா ....
நிலவை விழுந்துவிடாமல் பிடிக்க
தடுமாறுகிறது...
இரவின் நிழலாக இருக்க விரும்புகிறேன்
நீயென்னை தவிர்க்க முடியாது...
உன் முகம் காட்ட
கண்ணாடியாக நான் வருகிறேன்...
உடைத்துவிட்டால்
நீயெதில் உன் முகம் பார்ப்பாய் ?...
கனவுகளை இறுக்கிப் பூட்டி விடாதே
நல்ல கவிதைகளை இழந்து விடுவாய்...
காதலின் தூரம் கனவுகளின் தூரமென்று
பாரசீகக் கவிஞன்
சொல்லிவிட்டுப் போகிறான்,
இல்லை
காதலின் தூரம் கண்களில் விழும்
நொடிகளின் தூரம்தான்...
பற்றியெரியும் நெருப்பில் துடிக்கும் இதயம்
இதுவென்ன படிமம் ?
அதனை
குளிர்விக்க வரும் மழை தரும் பார்வை
படிமத்திலிவை காதலின் பறவைகள்....
இறங்கி வரும் நதியை
இறுக்கமாகப் பிடித்துக் கொள்
விழுவதும் நனைவதும்
மகத்தானதோர் விளைச்சலுக்குத்தான்...
முடிக்காத இந்தக் கவிதையை
அந்தாதியாகத் தொடருவோம்
காதலே அழகானதுதான் ....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment