
அப்பத்தாவின் அடுக்களையில்
சுட்டக் கருவாட்டின் மணம்
சூடு பரத்துகிறது!
சுட்டக் கருவாட்டிற்கும்
சுடாத பழம் கஞ்சிக்கும்
அத்தனை பொருத்தமென்று
அப்பத்தா அடிக்கடிச் சொல்வாள்!
விடுமுறை நாட்களில்
அப்பத்தாவின் வீடுதான்
எங்களின் சுற்றுலாத் தலம்!
அப்பத்தாவிற்கு
அழவே தெரியாது!
குறை சொல்லவும்
அவளுக்குப் பிடிக்காது!
ஆனாலும் அப்பத்தா
திமிர் காரிதான்! இன்னமும்
தனியாகத் தான் வசிக்கிறாள்!
பிள்ளைகளின் அழைப்புகளை
பொதுவாய் விலக்கிடுவாள்!
அவளொரு
அழகிய கதைச் சொல்லி!
நாங்கள் வயசுக்கு வந்தபின்
காதல் கதைகளும் கிசுகிசுக்களும்
குதுகலித்துச் சொல்லிச் சிரிப்பாள்!
எங்களின் வருகைக்காக
அப்பத்தாவின் அடுக்களையில்
அடிக்கடி
கோழிகள் செத்து மடியும்!
கட்டிப்பதாய்ச் சொல்லும் பேரனிடன்
அவனை
வச்சிப்பதாய்ச் சொல்லிச் சிரிப்பாள்...
பல்லே விழாத அப் பழம் கிழவி!
வாங்க அப்பத்தா
ஒருமிக்க இருக்கலாமென்றால்
ஒரு சொட்டுக் கண்ணீரோடு
காலத்தின் பின் நோக்கி நகர்வாள்!
என் மச்சான்
எனக்காகவே பார்த்துக் கட்டியத்
தாஜ்மஹால் இது...
விட்டுப் பிரிய முடியாதென்பாள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment