Thursday, 15 June 2017

முதுமை பெருமை

Image may contain: 1 person

கீழே விழுந்து கிடந்த முதுமையையெடுத்து 
தோளில் போட்டுக் கொண்டான்... 
அவனைப் பார்த்து 
எல்லோரும் சிரித்தார்கள், 
இது என் அடையாளம் 
எதற்காகத் துறக்கவேண்டுமெனக் கேட்டான் 
இளமைதான் சுறுசுறுப்பானதென்றார்கள் 
வேசமிட்டால் மட்டும் வேகம் வருமா? 
அறிவுப் பொதியை வீசியெறிய 
நானென்ன முட்டாளா? 
உதிர்ந்துவிட்ட முடிகள் ஒவ்வொன்றும் 
கடந்து வந்த பாதைகளைச் சொல்லுமே, 
வெளுத்துவிட்ட முடிகளெல்லாம் 
அனுபவத்தைப் பேசிக் கொண்டிருக்கும்... 
சுருக்கங்களை என்னவென்று நினைக்கிறாய்? 
இளமைக்கு எழுதிவைத்த கவிதைகளின் வரிகள், 
பிளாட்டோவும் செலோபோனும் 
சாக்ரட்டீஸின் சுருக்கங்களைத்தானே படித்தார்கள், 
மரணம் என்பது 
இளமைக்கும் முதுமைக்கும் பொதுவானதுதான், 
முதுமை என்பது 
வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய அத்தாட்சி 
அதைத் தொலைத்துவிட்டு 
ஆதாரத்தை எங்கே போய்த் தேடச் சொல்கிறாய்? 
அவனும் வேக வேகமாகத்தான் நடந்தான், 
முதுமையும் அவனுக்கு அழகாகவே இருந்தது 
அன்னை தெரசாவின் புன்னகையைப் போன்று...

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts