
அலையடித்த கவிதையொன்று
அமைதியாக உறங்கச் சென்றுவிட்டது,
கஸல் விரித்துப் பாட
யார் அதை அழைத்துச் சென்றது ?
சூஃபி வரிகளின் சூட்சம ஞானம் தெளிந்தவன்
இருளை விட்டு வெளிச்சத்திற்குப் போய்விட்டானோ ?
அவனது பால்வீதியில் நடந்தவர்களும்
ஆலாபனையில் நனைந்தவர்களும்
கண்ணீரை மட்டும்தான் அஞ்சலியாக்க முடியும்,
அதிர்ந்து பேசாத வார்த்தைகளுக்குள்
பூகம்பத்தைப் புதைத்து வைத்தவன்,
ஒவ்வொரு புன்னகையிலும்
ஒரு பூச்செடியை நட்டு வைத்திருப்பான்,
அம்மிக் கொத்த விரும்பாத சிற்பி
நிறைய சிற்பிகளையல்லவா
செதுக்கிவிட்டுச் சென்றிருக்கிறான்...
அவனது உளிப் பிசிறுதான்
அஞ்சலிக் கவிதையை எழுதிக் கொண்டிருக்கிறது,
உன் அமைதியான தூக்கத்தை கலைக்க
நாங்கள் யார்?
கொடுத்தவன்தான் எடுத்துக் கொண்டான்
நீயும்தான் விரும்பிச் சென்றுவிட்டாய்...
துஆக்களை மட்டும் பூக்களாய் சொறிகிறோம்,
மகஷரின் பாதைகளை அவை குளிர்விக்கட்டும்,
ரைஹானின் வாசல் உமக்கும் திறந்து இருக்கட்டும்..
இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊண்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment