Thursday, 4 May 2017

உயிர்மையின் சுஜாதா விருதுகள்

உயிர்மை பத்திரிக்கை சார்பில், உயிர்மையோடும் உணர்வோடும் சுஜாதா விருதுகள் 03 .05 .2017 அன்று 11 ஆளுமைகளுக்குச் சிறப்பாக வழங்கப் பட்டதை நேரில் சென்று காணாவிட்டாலும் யூடியூப் மற்றும் செய்தி ஊடகங்கள் வழியாக முழுமையாகக் கண்டும் படித்தும் ரசித்தேன். 

விருதுகள் என்பது ஓர் அங்கீகாரம் மட்டுமல்ல ஓர் ஆளுமையின் உற்சாகமும் கூட. அவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சில குழப்பங்கள் இருக்கலாம். ஆனால் சரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதா? என்பதுதான் மிகவும் முக்கியம். 


உயிர்மையின் சுஜாதா விருதுகளின் தேர்வுகள் சரியென்றே சொல்லவேண்டும். ஜி.காரல் மார்க்ஸ், அ.கரீம், சோ.தர்மன், கரன் கார்க்கி, நரன்,ஜெ.பிரான்ஸிஸ், கிருபா, வெய்யில், அ.ராமசாமி, வி.முத்தையா, சரவணக் கார்த்திகேயன், ஷான் கருப்பசாமி - இவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொருவகையில் தங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் பாராட்டுவதுபோல் எள்ளி நகையாடியதையும் காணமுடிந்தது. வெய்யிலையும், அ.கரீமையும் பாராட்டி எழுதுவதைப் போல் எழுதிவிட்டு, "ஒரு படைப்பாளி எழுந்து வரும் போது இருந்தாகவேண்டிய புதிய அம்சம், குறைவாகவேனும் இவர்களுக்குத் தென்படவில்லை, முன்னரே எழுதப்பட்ட தடத்தில் செல்பவை " என்று அவருக்கே உரித்த எள்ளல்! அவர் மட்டும் என்ன புதுத் தடத்தில் பயணித்துவிட்டார் என்றுதான் தெரியவில்லை. அவருக்குப் பிரச்சனையே வெய்யிலும், அ.கரீமும்தான். 

இணையத்தில் வம்பாடுவதுமட்டுமே தனது தனிச் சிறப்பு என்று கருதும் ஜெயமோகனுக்கு ஷான் கருப்பசாமியும், சி.சரவணக் கார்த்திகேயனும் இணையத்தளத்தில் எழுதுவதைப் பற்றியும், அவர்கள் இணையத் தளங்கள் நடத்துகிறார்களா என்பது பற்றியும் தெரிந்திருக்க நியாயமில்லைதான். 

சுஜாதாவின் பெயருக்கான விருதுகள் சம்பந்தமாகவும் சுஜாதாவிற்கு எதிராகக் கருத்தாடல்கள் காரசாரமாக நடந்தன. பார்வையாளனாகப் பார்த்து விட்டு நகர்ந்தேன். சுஜாதா எனக்கும் பிடித்த ஒரு நல்ல எழுத்தாளர். எழுத்தின் பாணிகளில் புதுமையை நுழைத்தவர்களில் சாவி, ஜெயகாந்தன், சுஜாதா, சுப்ரமணி ராஜூ, பாலகுமரன் இவர்களை ஒதுக்கிவிட்டு நகர முடியாது. 

  கவிஞர்.மனுஷ்ய புத்திரனின் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா. அவருக்கு நன்றி செய்யும் முகமாக அவரின் செயல்பாடுகள் தொடர்வதில் யாருக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை. 

மனுஷ்ய புத்திரன் க்கான பட முடிவுஎழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பேச்சு ரசிக்கும் படியாகவே இருந்தது. ரசிக்கும் படியாக மட்டுமே இருந்தது. நடிகர் திலகத்தை அப்படிச் சொன்னார், வாலியை இப்படிச் சொன்னார் என்று கணையாழியின் கடைசிப் பக்கங்களைப் புரட்டி சொல்லி, சுஜாதாவின் இமேஜை உடைத்ததுதான் அவர் செய்த மிச்சம். 

பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் கோரிக்கையான நாடக படைப்புகளுக்கான விருதையும் நண்பர் மனுஷ்ய புத்திரன் கவனத்தில் கொள்ளவேண்டும். பேராசியரின் கூற்றுப்படி நாடக படைப்புகளாக 21 படைப்புகளைச் சுஜாதா அவர்கள் எழுதியுள்ளார்கள் என்பதும் வியப்பான ஒன்றுதான். 

கணவரின் புகழில் திருமதி சுஜாதா அவர்களும் நிறைந்திருக்கிறார் என்பதை, அவர்களின் பங்களிப்பில் உணரமுடிகிறது. 

இனியும் இந்தப் பணி தொடர உயிர்மை நிறுவனத்திற்கும், கவிஞர். மனுஷ்ய புத்திரனுக்கும் நல் வாழ்த்துகள் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts