Wednesday, 3 May 2017

மொய்ப் பணம்


அன்றாடம் காய்ச்சிகளுக்கு, சிரிப்பென்பது எப்போதுமே நிரந்தரமாக இருந்தது கிடையாது. அப்படியே அவர்கள் வாழ்வில் எப்போதாவது சிரித்துவிட்டாலும், அதை யாரவது வந்து பிடிங்கிக் கொண்டு போய்விடுவார்கள். 

பெரியசாமி மட்டும், இதிலென்ன விதி விலக்காகவா இருக்க முடியும்! 
மளிக்கடையின் கூலியாக வேலை பார்க்கும் அவரது வருமானம், சேமிப்பிற்கெல்லாம் அடங்காதது. மாசத்திற்கொரு முறை கறியும் மீனும் எடுத்தாலே பெரிய விஷயம். ஏதோ வீட்டு மனுஷி சாமர்த்தியமாக இருப்பதால், கையைக் கடிக்காமல் குடும்பம் நகர்த்தமுடிகிறது. 

இப்போது அவருக்கு வந்துள்ள பிரச்சனையே, ஒரு கல்யாணப் பத்திரிக்கையின் மூலமாக வந்ததுதான்  ! சாதாரண உறவு முறை கல்யாணமாக இருந்திருந்தால் கூட ஏதாவது காரணம் சொல்லி, போவதை தவிர்த்துக் கொள்ளலாம். அப்படியே போனாலும் உறவுக்காரர்களுக்கு இவரின் நிலை நன்றாகவே தெரியும் என்பதால், ஏதோ 200 , 300 ரூபாய்வைத்தால்கூடப் போதுமானதுதான்.
sad family modern painting hd க்கான பட முடிவு
பத்திரிக்கை வைத்துவிட்டுப் போனது , அவரது நெருங்கிய நண்பன் தனசேகர். பெயருக்கேற்றதுப்போல் மிகவும் பெரிய வசதிக்காரன். பெரியசாமியின் கல்யாணமே கூட அவன் செலவில்தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது அவனது மகனுக்குதான் கல்யாணம், வசதிக் கூறுகளையெல்லாம் கூட பார்க்காமல் , தன் மனைவியுடன் வந்து பத்திரிக்கையை வைத்துவிட்டு, அன்புடன் அழைக்கிறான். எப்படிப் போகாமல் இருக்க முடியும் ? 

எப்படியும் ஐயாயிரம் ரூபாய்க்காவது மொய் செய்தால்தான் அவனுக்கும் மரியாதையாக இருக்கும்.   எப்படிப் பணத்தைப் பொறட்டுவது என்பதுதான், பெரியசாமிக்கு பெரிய கவலை...

மனைவியிடம் கூட, வைத்து பொறட்டும் அளவிற்கு நகை நட்டென்று எதுவும் கிடையாது. முதலாளியிடம் கேட்கலாமென்றால், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பையனின் படிப்பு செலவுக்காக இருபதாயிரம் கடனாக வாங்கியிருந்தார். மறுபடியும் கேட்டால் 'கடனை வைத்துவிட்டு நின்றுக் கொள்' என்று சொன்னாலும் சொல்லிவிடலாம்.. 

புஷ்பம் கூடச் சொல்லி பார்த்துவிட்டால், 'அவர்களுக்கு நம்ம நிலமை நல்லாவேத் தெரியுமுங்க, நீங்க மொய் வைக்கலன்னு அவங்க ஒன்னும் கோவிச்சிக்கமாட்டாங்க, கடன் மேல கடன் வாங்கனா நாமதாங்க அவஸ்த்தை படணும்' 

'இல்ல புஷ்பம், அவனுக்குன்னு ஒரு மரியாதையிருக்கு, அதுக்கு பங்கம் வர்ற மாதிரி நாமப் போய் நிக்கக் கூடாது, அதான் யோசனையாவே இருக்கு..." 

'இல்லைன்னா கல்யாணத்துக்குப் போகாம, ரெண்டு நாள் கழிச்சி போய்ப் பார்த்துட்டு வரலாம் என்ன சொல்றீங்க?' 

"இப்பதான் புஷ்பம், கடவுள் மேலேயே கோபம் வருது, நம்மளை மாதிரி ஆளுங்களையும் ஒரு பொறப்புன்னு படைச்சி வைச்சிருக்கான் பாரு..." - ஆதங்கத்தை கடவுள் மீது திருப்பினார்.

ஆனால் புஷ்பத்திற்கோ, மொய்ப் பண சடங்குகள் மீதுதான் கோபம் வந்தது.ஏழை எளிசுகளுக்கு, மொய்ப்பணம் கை கொடுக்கும் என்பது உண்மைதான். வட்டியில்லாத கடனாக சுமையை குறைக்க மொய்ப் பணம் என்பதுதான் பெரும்பாலும் உதவுகிறது.
வசதி படைத்தவர்கள் இதை தவிர்த்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

கல்யாண பத்திரிக்கையில் புஷ்பம் முதலில் பார்த்ததே, 'அன்பளிப்பு தவிர்க்கப்பட்டது' என்று அச்சிடப் பட்டிருக்கிறாதா என்பதைத்தான்.

பெரியசாமிக்கும் புஷ்பத்திற்கு காதல் திருமணம் என்பதால் மொய்ப்பண உதவி என்பதே தேவைப்படமால் போய்விட்டது. எல்லாமே கணவரின் நண்பர் தனசேகரே பார்த்துக் கொண்டார். அதனால்தான் பெரியசாமிக்கு இத்தனை ஆதங்கமும். அவனுக்கு மொய்ப்பணம் வைக்கவேண்டும் என்பதே பெரியசாமிக்கு  முக்கியமில்லை. ஒரு விசுவாசத்தைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்பதுதான் ...

2
வாசலில் கார் வந்து நிற்கும் ஓசையை கேட்டு ஓடிப் போய் பார்த்தாள் புஷ்பம். தனசேகரின் மனைவியும் மகனும் வந்திருந்தார்கள்...அவர்களை உட்காரவைத்துவிட்டு தூங்கிக் கொன்டிருந்த கணவனை எழுப்பிக் கொண்டு வந்தாள்..

" வாம்மா தங்கச்சி. எப்ப வந்தீங்க" - பெரியசாமிக்கு அவர்களின் வருகை புரியவில்லையென்றாலும் அவர்கள் வந்ததில் மகிழ்ச்சிதான்.

பையனின்  கையிலிருந்த பெரிய கட்டைப் பையை வாங்கி புஷ்பத்திடம் கொடுத்தாள் தனசேகரனின் மனைவி.

"என்னக்கா இது?"- புஷ்பம்

"அவர் ,கல்யாணத்திற்காக உங்களுக்கும் சேர்த்துதான் துணி மணி எடுத்தாரு. அதை உங்ககிட்ட என்னையே நேரில போய் கொடுத்திட்டு ஒரு வாரம் முன்னாலயே வரணும்னு சொல்லிட்டு வந்திடுன்னு சொல்லி அனுப்பினாரு..அண்ணே அவசியம் நீங்க எல்லோரும் வந்திடனும்.." - தனசேகரின் மனைவி

"ஏம்மா இதெல்லாம், நாங்க வந்திடப் போறோம்" -பெரியசாமி.

"என்னண்ணே சொல்றீங்க, நீங்க  வேற மனுஷாள என்ன? நீங்களும் எங்க குடும்பம்தானே! அவருக்கு என்ன டிரஸ் எடுத்திருக்காரோ அதையேதான் உங்களுக்கும் எடுத்திருக்காரு, எனக்கும் புஷ்பத்திற்கும் கூட ஒரே மாதிரி உடுப்புதான். கார்த்திக்கு அவன் காலேஜிக்கே போய் காசை கொடுத்திட்டு வந்திட்டாரு , அவனுக்கு புடிச்ச டிரஸ்ஸா எடுத்துக்க சொல்லி.. நீங்க வந்தாப் போதும்"

இருவரின் கண்களிலும் வழியும் கண்ணீரை வழியவிடாமல் இருக்க முடியவில்லை. இந்த காலத்தில் இப்படியும் ஒரு நட்பா ! அவன்தான் நண்பனென்றால், அவனுக்கு வாய்த்தவளும் அவனைப் போலவே அமைந்ததெப்படி?

புஷ்பத்தை உள்ளே அழைத்துச் சென்ற தனசேகரின் மனைவி, தன் கழுத்திலிருந்த செயினை எடுத்து அவளின் கழுத்தில் போட்டுவிட்டு, "மொட்டையா வந்தா உனக்கே ஒரு மாதிரியா இருக்கும் , இதை போட்டுகிட்டு வா புஷ்பம்"

"வேணாங்க்கா!" - தயங்கினாள் புஷ்பம்

உள்ளே வந்த பெரியசாமி ,"வாங்கிக்க புஷ்பம்... " என்று சொல்லிவிட்டு," தங்கச்சி மத்தியானம் சாப்பிட்டுட்டுதான் போகணும்" என்று சொல்லிவிட்டு, விரசாக கறியெடுப்பதற்க்காக மார்க்கெட்டுக்கு கிளம்பினார். 

-மு.முகமது பாட்சா







No comments:

Post a Comment

Popular Posts