
வசீகரனின் ஆடுகளுக்கு
தலையாட்ட மட்டுமே தெரிந்திருந்தது,
'க்ரிச்,க்ரிச்' என்றெழுப்பும்
அவன் பக்கவாட்டுத் தாடையோசைகளுக்கும்
அர்த்தம் தெரிந்திருந்தன ஆடுகளுக்கு,
பட்டியைத் திறந்ததும்
அவனை முகர்ந்துவிட்டுதான் நகர்கின்றன,
ஒரே மாதிரியிருக்கும் ஆடுகளை
அவன்தான் அடையாளம் கண்டு பிரிக்கிறான்,
அவன் வைத்த பெயர்கள்தான் அவற்றிற்கு
மேய்ச்சலில் இருக்கும்போது
அவன் உறக்கத்தை அவை கலைத்ததேயில்லை,
குட்டையிருக்குமிடம் தெரிந்தாலும்
அவன் காட்டினால்தான் அவற்றிற்குத் தண்ணீர்,
அந்தி சாய்ந்ததும் அவனருகில் கூடிவிடும்,
அவனின் திரட்டுக் குச்சியில் அடிவாங்காமல்
அழகாய் வந்து சேர்ந்துவிடும் பட்டிக்கு ,
ஆண்டைச் சொன்ன வேலைகளை முடித்துவிட்ட
வசீகரனும்
போட்ட சாப்பாட்டை முடித்தவுடன்
அவனுக்கான பட்டியில் அடைந்துவிடுகிறான்,
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment