Tuesday, 2 May 2017

எழுத்துகளின் பிம்பம்(அசோகமித்திரன்)

அசோகமித்திரன் க்கான பட முடிவு           கதையெழுதுவதென்பது, கதை படிப்பதைவிடச் சுவாரசியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதை உயிரோட்டம் பெற முடியும். இப்போது வரும் பெரும்பாலான கதைகள் உயிரோட்டம் இழந்த நிலையில்தான் இருக்கின்றன என்பதே என் கருத்து. 

எழுத்தாளர் அசோகமித்திரனை எழுத்துலகின் ஜாம்பவான் என்று கொண்டாடி விட்டு, பிறகு தூக்கிப் போடுவதில் எனக்கு உடன் பாடில்லை. விமர்சனங்களுக்கு உட்படாத எழுத்தாளர்கள் யாரும் கிடையாது. அவரும் அதில் அடக்கமாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. 
ஆனால், அவரது எழுத்துகளை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஒரு அரங்கத்தில் அவர் பேசும் போது, "என்னுடைய எழுத்துகள் யாருக்கும் மன அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுக்காமல் இருபதையே விரும்புகிறேன்" என்று சொல்லியிருந்தார். 

இன்றைய வளரும் எழுத்தாளர்கள், அவரிடம் படிக்கவேண்டியது நிறையவே இருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.அவரும் ஒரு சுயமியாக உருவாகியிருக்க முடியாது. புதுமை பித்தனின் எழுத்துச் சினேகத்தை, இவரது எழுத்துகளிலும் நாம் பார்க்கலாம், கி இராஜ நாரயணனும் , அசோகமித்திரனும் , சொல் பொருளை எடுத்துக் கொண்டு கதைகளை நகர்த்துவதில் சாமர்த்தர்கள். 

இன்றைய சில எழுத்தாளர்கள், சிற்றிதழ்களில் எழுதுவதையே தரக் குறைவென்று நினைக்கிறார்கள். ஆனால் அசோகமித்திரன் சிற்றிதழ்களில்தான் அதிகம் எழுதினார். கணையாழியில் 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்தார்.அவரது 'கரைந்த நிழல்கள்' என்ற நாவல் நா. பார்த்தசாரதியின் "தீபம்" இதழில் வந்ததுதான்.அவரது எழுத்து பணியே"எழுத்து" என்ற பத்திரிக்கையில்தான் தொடங்கியது. 

"தண்ணீர்" என்ற நாவல் பெரும் தாக்கம் கொண்டது. இவருடைய 'புலிக்கலைஞன்' என்ற கதை நாசர் நடிக்க மார்ட்டீன் ரெப்கோ என்பவரால் குறும்படமாக இயக்கப்பட்டது. இப்போதும் இயக்குனர் வஸந்த் அவர்கள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற கதையின் மையக் கருவை வைத்துத் திரைப்படமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார். 

அவரது கதைகள் பேசப்படுவதற்கு முக்கியக் காரணமே, அவரது எளிய சொற் பிரயோகங்கள்தான். அவரது வார்த்தைகளில் அலங்காரமிருக்காது, சாதாரண மனிதர்களையே அவரது கதைகள் பின் தொடர்ந்து சென்றன. தேவையில்லாமல் வார்த்தை நீட்டல்கள் இருக்காது. 

அவரது 'காலமும் ஐந்து குழந்தைகளும்' என்ற சிறு கதை, ஒரு வேலைதேடும் இளைஞனின் அன்றைய இண்டர்வியூ இரயில் பயணத்தில் பயணிக்கும். அவனது மன நிலை சாத்தியங்களை அழகாகச் சொல்லும் அந்தக் கதை, அங்குப் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகளையும் அவன் மனவோட்டத்தில் சுமந்து செல்வதாக அமைந்திருக்கும். 

அவரது 'எலி' கதையில் எலியை பிடிப்பதற்காகக் கதை நாயகன் வடை வாங்குவதில் தொடங்கி , அவன் வடை வைத்து, எலியை பிடித்து வெளியில் கொண்டு போய்த் திறந்துவிடுவதுவரை கதை நம்மையும் கூடவே நகர்த்திச் செல்லும்.கதையின் முடிவில்,"அந்தவடை கடைசிவரை துளியும் திண்ணப்படாமல் முழுசாக இருந்தது" என்று முடித்திருப்பார். கடைசியாக எலி அந்த வடையையாவது சாப்பிட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் தொக்கி நிற்கும். 

மரணம் என்பது எப்போதும் எப்படியாவது நிகழக் கூடியதுதான். அப்படித்தான் அசோகமித்திரனின் மரணமும். ஆனாலும் அவர் எழுத்துலகிற்கு விட்டுச் சென்றிருக்கும் கதைகள் அவரைக் காலம் முழுவதும் நிச்சயம் பேசிக் கொண்டேயிருக்கும்.

-- மு.முகமது பாட்சா

சிற்றிதழ்கள் உலகம்(ஏப்ரல் - 2017)

No comments:

Post a Comment

Popular Posts