அந்தக் கடிதம்
எப்படித் தொடங்கியிருக்குமென்று
சரியாக நினைவிலில்லை,
முதல் ஐந்தாறு வரிகளை
கரையான்கள் சீரணித்திருந்தன,
நீயென்றால் எனக்கு உயிர்டா...என்ற வார்த்தை
அப்படியேயிருந்தது,
ஆம், அவள் அப்படித்தானிருந்தாள்...
விரல் தொட்டு மின்சாரமெடுத்துக் கொள்வாள்,
கனவைவிரித்து
கைப்பிடித்து அழைத்துச் செல்வாள்,
மூக்கைத் தொட்டு விலகும்
அந்தக் கற்றைமுடிமீது பொறாமையுண்டு,
அதை விலக்கும் விரல்களுக்காக மன்னித்துவிடுவேன்,
மௌனமொழி பேசுவதெல்லாம்
அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது,
சாகும்வரை பேசுவோம் என்பாள்...
அடுத்தடுத்த வரிகளையும் மேய்கிறேன்...
அவளென் நிகழ்காலத்திற்குள் மெல்ல நுழைகிறாள்,
தெய்வ தரிசனங்களில் அவளுக்குச் சாந்தியில்லை,
கடவுள்கள்
காதலைப் பிரித்துவிடலாமென அஞ்சுவாள்,
கன்னத்தைக் கடித்துவிட்டு சிரிப்பாள்,
இந்த வலி எப்போதுமிருக்குமென்று... உண்மைதான்
இப்போதும் வலிக்கிறது !
ஆம்
இப்போதும் வலிக்கிறது...அவளைச் செல்லரித்த
நோயென்றக் கரையான்களை நினைத்து...
கடைசி வரிகள் இப்போதில்லையென்றாலும்
நினைவிலிருக்கிறது,
'இது
இந்தக் கடிதத்தின் கடைசி வரி இல்லடா...
இதுதான்
நான் எப்போதும் உன்னுடன் வாழப் போகும்
முதல் வரி !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment