Monday, 8 May 2017

நீட் தேர்வின் அவலம்

மருத்துவ கல்விக்கான   நீட் தேர்வை எழுதிவிட்டு வந்த   மாணவர்கள் அனைவருமே மிகவும்  அதிர்ச்சியுடன் காணப்பட்டார்கள். கேள்விகள் எல்லாமே சி பி எஸ் சி முறையில் இருந்ததுதான் அதற்கு ஒரே காரணம். அது மட்டுமில்லாமல், அவர்களைச் சோதனை என்றப் பெயரில், சோதனையாளர்கள் அவர்களுக்குக் கொடுத்த இன்னல்கள் எல்லாமே மிகவும் கேவலமானது. எந்த நாட்டிலும்  நடக்காததும் கூட ! 

பெண்களின் தலை முடிகளை அவிழ்த்து விடச் சொல்லிவிட்டார்கள், காதுகளில், வாயில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுக்கைச் சட்டைகள் கத்திரிக்கப் பட்டு அரைக் கை சட்டைகளாக மாற்றப் பட்டன, சில இடங்களில் இன்னர்வேரையும் அவிழ்க்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். சற்றே யோசித்துப் பாருங்கள். ஒரு முழுமையான உடை அலங்காரத்துடன் இருப்பவர்களை அலங்கோலமாக்கி ஒரு பைத்தியம் போலவே மாற்றிவிட்டார்கள். 

நீட் சோதனை க்கான பட முடிவு

இந்தச் சம்பவம் அவர்கள் தேர்வு எழுதும் முன்பாகவே அவர்களுக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுத்துவிட்டது என்பதுதான் உண்மை. அப்படியென்றால் மாணவர்கள் தேர்வு எழுதும் அறையில் ரோந்துவரும் பறக்கும் படை என்ன சமோசாவா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ? இதைக் கல்வியாளர்கள் கண்களை மூடிக் கொண்டுதான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்களா?  இதை ஏன், நீதிபதிகள் சுய வழக்காகப் பதிவு செய்து அரசை கண்டிக்கக் கூடாது ?   இது நம் கல்வி ஒழுக்கத்தின் மீது ஒட்டு மொத்தமாக வீசிய சாக்கடை கழிவு ! இதை அனுமதிப்பவர்களைப் பார்த்து "சீய்" என்று உமிழத்தான் தோன்றுகிறது.

மாநில கல்வி முறையில், மாநிலமே சுயாட்சி அதிகாரத்தைத் தக்கவைத்து, நீட் தேர்வை நடத்த வேண்டும், அப்போதுதான்  சி பி எஸ் சி மாணவர்களின் கல்வித் தரம் என்னவென்று நன்றாக விளங்கும்.  அவர்களின் வெற்று பாவலாவும், போலி கல்வியாளர்களின் முகமூடியும் நன்றாகக் கிழியும்.

முதலில் தமிழகத்தின் கல்வி முறையே தப்பென்று சொல்வதே தவறான ஒன்றாகும். கல்வியின் தரத்தில் மற்ற மாநிலங்களைவிட இங்குதான் சிறப்பாக உள்ளது. இங்கு மட்டும்தான் பகுத்தறிவு சார்ந்த கல்வியும் உள்ளது. அதனால்தான் இங்குத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும், இதர சிறு பான்மை மக்களும் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.  இந்த முன்னேற்றம்தான் ஆதிக்க பிரிவினருக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது.

இந்த வேக்காட்டின் வெந்தனல் காரணமாகத்தான் உயர் சாதிய அழுத்தங்களைக் கொண்ட மத்திய அரசு, மாநில கல்வியின் சுயாட்சி உரிமையில் கைவைக்க துணிந்துள்ளது. அதற்கு, நம் மக்களே தேர்ந்தெடுத்த அதிமுக ஆட்சியும்,  தங்களின் தனிப்பட்ட சுய நலன்களுக்காக பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவிட்டதென்பதுதான் வெட்கம் ! இதே ஜெயலலிதா இருந்திருந்தால் இதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. முதலில் மா.பா.பாண்டியராசன் தான் இதற்குத் தலை வணங்கியவர். பின்னர் இங்குள்ள மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் நீட் தேர்வு மையங்களை அரசே நடத்தும் என்று ஒரு வெற்றரிக்கையை சமர்ப்பித்தார். 

இப்போதுள்ள முதல்வரைக் கேட்டால், பதில் சொல்லும் நிலைமையில் அவர் இல்லவே இல்லையென்பதுதான் அப்பட்டமான உண்மை. அவருக்கு அவர் பிரச்சனைதான் முக்கியம்.

  இப்போதுள்ள நீட் தேர்வு முறையினால், இனி மாநில கல்வி பயின்றவர்கள் பிரகாசிக்க முடியாதென்ற மாயத் தோற்றம் உருவாகியுள்ளதால், இனி பெற்றவர்கள் தங்களின் பிள்ளைகளை சி பி எஸ் சி கல்விக் கூடங்களில் சேர்ப்பதற்கே முயல்வார்கள். இதனால் அரசுப் பள்ளிகளை மூடும் அபாயம் நம் கண்முன்பாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது . மாநில பாடத் திட்டங்கள் வரும் காலங்களில் வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டால், மாநிலத்தின்  சுய ஆட்சி தன்மையை தமிழகம் விரைவில் இழந்துவிடும்.

சி பி எஸ் இ  கல்விக் கூடங்கள் பெருகுவதால் இந்தி, சமஸ்கிருத திணிப்புகளை மத்திய அரசால் , தமிழகத்தில் எளிதாக நிகழ்த்தி விட முடியும். மேலும் இப்போதே பன்னாட்டு  நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளே நுழைந்து விட்டன. அடுத்து அவர்களின் பார்வை பொறியியல் கல்விகளுக்குள்ளும் நுழையப் போகிறது.  இதனால் இனி நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான வினாக்களை வடிவமைக்கப் போவதும் அவர்களாகத்தான் இருக்கப் போகிறார்கள். இப்போது புரியும் என்று நினைக்கிறேன். அவர்களின் பயிற்சி நிறுவனங்களில் படிப்பவர்கள்தான் இனி மருத்துவர்களாகவும் , இஞ்சினியர்களாகவும் வெளி வரமுடியும். இதனால் மேல் தட்டு மக்கள் பணத்தை கொட்டிக் கொடுத்து தங்களின் வாரிசுகளை மேல்தட்டுகளிலேயே வசதியாக நிறுத்தி வைக்க எளிதாகி விடும்

சாதாரண உழவனின் மகனோ, ஒரு கடை நிலை ஊழியரின் பிள்ளைகளோ, இனி இது போன்ற உயர் கல்விகளை  பெறமுடியாதென்பதை எப்படி நாம் உணரப் போகிறோம் ? மேலும் இவர்களை பள்ளிக்  கல்வியிலேயே இடை நிறுத்தம் செய்வதற்கான முன் நடவடிக்கைகளும் மோடி அரசால் வடிவமைக்கப் பட்டு வருகின்றது. 

நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுதச் சென்ற மாணவ செல்வங்களை மன உளைச்சலாக்கி இழிவு செய்ததை நாம் எப்படித்தான் எடுத்துக் கொள்ளப் போகிறோம் ?  இதுவரை படித்து அவர்கள் வாங்கிய மார்க்குகள் மதிப்பிழந்துவிட்டதைப் பற்றி நாம் கவலைப் படவேயில்லை,  நீட் தேர்வு அவசியமென்று கூறிய நீதிபதிகள் இதில் உள்ள குறை பாடுகளைக் களைய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? 

அப்படி எதுவும் நடக்காதென்றால்,  இன்னுமொரு அடிமை சமூகத்திற்காக நாம் கட்டமைக்க பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அப்பட்டமான உண்மை.


- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts