"அம்மா, சீக்கிரம் வாம்மா... பாட்டி வீட்டுக்கு போயிடலாம்! அப்பா வந்திடுவாரும்மா! " -ஹர்ஷினி தன் அம்மாவின் கையை, பதட்டத்துடன் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்.
"அங்கெல்லாம் வேணாம்மா... சொன்னாக் கேளு. அடிக்கடி அங்கப் போனா நல்லா இருக்காதும்மா!" அழுகையை அடக்கியவளாக ஹர்ஷினிக்கு தேறுதல் சொன்னாள் சுகன்யா.
"இல்லம்மா, அப்பா வந்திட்டா உன்னைதானம்மா அடிப்பார் ! சொன்னாக் கேளும்மா!"
ஹர்ஷினி 5ம் வகுப்பு படிக்கும் பெண்தான் என்றாலும், அம்மாவின் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருப்பவள். அப்பாவிடமும் அவள் அப்படிதான் பிரியத்தை வைத்திருந்தாள். அவன் என்று குடித்துவிட்டு வந்து வீட்டில் சுகன்யாவிடம் தகராறு செய்வதும் , அடிப்பதுமாக மாறிப்போனானோ அன்றிலிருந்து, ஹர்ஷினியின் பார்வையில் அவன் கொம்பு முளைத்த ஒரு இராட்சசனாகவே மாறிப் போனான்.
சில நேரங்களில், இருவரும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்குப் போய் தஞ்சம் அடைந்துவிடுவார்கள். அங்கு மட்டும்தான் அவன் வரத் தயங்குவான்.
ஆனாலும் அடிக்கடி அங்குப் போவது, அவளுக்கே அசிங்கமாக இருந்தது. அதனால்தான் மகளிடம் வேண்டாமென்று சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.
ஹர்ஷினிக்கு சாப்பாடு கொடுத்துத் தூங்க வைத்தாள். அவனோடு வாழ்ந்த அந்தப் பழைய நாட்கள் இனிமையாக இருந்தாலும் , அவனது தற்காலிக நடவடிக்கைகள் அவன் மீது படிந்திருந்த அன்பை படிப் படியாக கரைத்துவிட்டது.
நேரம் போய்க் கொண்டே இருந்தது. மணியும் 10.00 ஐ தாண்டிவிட்டது. அவன் இன்னமும் வரவில்லை. மனதிற்குள் சிறு கலக்கம் வரத் தொடங்கியது. எப்போதும் இவ்வளவு லேட் நைட் ,அவன் வருவதேக் கிடையாது. என்ன ஆனது? -அவளின் சிந்தனைகள், அவளைப் பலவாறாக சிந்திக்க வைத்தன.
கலக்கத்தில் நகர்ந்த இரவு விடிந்தது . அப்பா வராதது ஹர்ஷினிக்கு சந்தோஷம். அம்மாவின் சோர்வை பார்த்து, "ஏம்மா, டல்லாயிருக்கே ,நீ ஃபிரஷ்ஷா இரும்மா. எங்கேயாவது குடிச்சிட்டு விழுந்து கிடப்பார்... வந்துடுவாரு...போம்மா"
அப்போதுதான் அந்தப் போன் வந்தது. அவன் இரவு பாரிலேயே இறந்து கிடந்ததாக. ஒரு நிமிஷம் அதிர்ந்துதான் போனாள் ,சுகன்யா.
அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்து விழுந்தது. என்ன இருந்தாலும் சில காலங்கள் மகிழ்வுடன் வாழ்க்கையை நகர்த்தியவன். ஹர்ஷினிக்கு அது கூட வரவில்லை...
உடனே போயாக வேண்டும். பிணக்கிடங்கில் அவர்கள் சிதைத்துக் கொடுக்கும் உடலைத் தூக்கி வந்து கிடத்திவிட்டு அழவேண்டும் . வாழ்க்கை முடிந்து போயிற்று என்று அழுவதா? இல்லை தொல்லை விட்டதென்று மகிழ்வதா ?
'அப்பாவுக்கும் அம்மாவுக்கும் போன் பண்ணவேண்டும். அவர்கள் கூட வந்தால்தான் எல்லாவற்றுக்கும் துணையாக இருக்கும்'
ஹர்ஷினி , நீ இன்னைக்கு ஸ்கூல் போக வேணாம்மா. நாம போய் அப்பா பொணத்தை வாங்கியாரணும்... இதோ இரி வந்திடறேன்' என்று உள்ளேச் சென்றவள், நன்றாகத் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்துவிட்டு நல்ல உடை உடுத்திக் கொண்டு நெற்றியில் பொட்டை ஒட்டிக் கொண்டுவந்தாள்.
ஹர்ஷினிக்கும் நல்ல புது உடையாகப் பார்த்து உடுத்தினாள். அடுப்படிக்குச் சென்று பாயசம் செய்து எடுத்துவந்து மகளுக்கும் கொடுத்து தானும் நன்றாகச் சாப்பிட்டாள்.
இப்போது வராத கண்ணீரை வரவழைத்து, அழுதவளாகப் போன் செய்து அப்பாவிற்குத் தகவல் சொன்னாள்.
ஹர்ஷினிக்கும் அம்மாவின் இந்த நடவடிக்கை பிடித்துதான் இருந்தது. அவள், தன் மனதிற்குள்ளாக அம்மாவிடம் சொன்னாள்,' ஒவ்வொரு வருஷமும் இந்த நாளை இனிப்போடு கொண்டாடணும்..மா!"
.
- முகமது பாட்சா
No comments:
Post a Comment