இரவினைக் கொழுத்திவிட்டுச் செல்கிறேன்
ஒரு யுத்த களம் கண் முன் விரிகிறது
நிகழ்காலத்தில் உட்கார்ந்து கொண்டு
ஏளனம் செய்கிறது கடந்த காலம்
எதிர்காலம் நோக்கி ஓடி ஓடியே
அங்கேயேதான் இன்னமும் நிற்கிறேன்
கால்களெல்லாம் களைத்துவிட்டதாக
ஓட்டத்தின் நிதானம் சொல்கிறது...
கண்களின் நிறம் மங்கிவிட்டதென்று
நேற்றுதான் அவள் சொன்னாள்
இருக்கலாம்
அவள்கூட யாரோ அவனாகவே தெரிகிறாள்
சப்தக் கூட்டலில் குரைப்பொலி மிகைக்கிறது
ஆகாரத்தை விலக்கிய விரதம்
இன்றோடு முடிவிற்கு வரலாம்
அலெக்ஸாண்டராய் கைகளை விரிக்கிறேன்
ஸ்பரிசித்த ஒரு கை 'ப்..ச்' சென்று உச்சுக் கொட்டுகிறது
அடர் மௌனம் சூறாவளியை எழுப்பலாம்
அப்படியெதுவும் நிகழ்ந்துவிடவில்லை
சின்னதாய் அங்கிங்கு விசும்பலிசை
'போய்ச் சேர்ந்ததே நல்லது' - யாரோ சொல்கிறார்
ஆம், ஒரு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment