Tuesday, 16 May 2017

அழவேண்டுமா ?


உலகத்தின் மிகப்பெரிய கணினித் தாக்குதல் இதுதான் என்று இணையத் தொழில் நுட்ப வல்லூனர்கள் அறிவிக்கிறார்கள் ! 

இந்தத் தாக்குதலுக்குப் பயந்து இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏ.டி.எம். மையங்கள் ரிசர்வ் வங்கி வழிக் காட்டுதலின் அடிப்படையில் மூடிவைத்துள்ளன. 

wanna cry virus க்கான பட முடிவு
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் செயல் தலைவர் பிராட் ஸ்மித் அறிவிப்பின் படி, இந்த வைரஸ் பாதிப்பால் 150 நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இணைய இணைப்புகள் செயலிழந்து உள்ளதாகவும் அறிய முடிகிறது. 





இந்த அசூர அச்சுறுத்தலுக்குச் சொந்தக்காரன் வானாக்ரை என்கிற ரேன்சம்வேர் இன வைரஸ்தான். வானாக்ரை என்பது அமெரிக்கன் சொல் மொழியில் வாண்ட் டூ க்ரை என்பதுதான். தமிழில் சொல்லவேண்டுமென்றால் 'அழவேண்டுமா' என்பதுதான் அதன் பெயர். 

இணைய வைரஸ்களில் இதுதான் மிகவும் ஆபத்தானது என்று தொழில்நுட்ப வல்லூனர்கள் சொல்கிறார்கள். இந்தத் தாக்குதலை ரஷ்யாதான் நடத்தியுள்ளதாக அமெரிக்கா,முதலில் அறிவித்தது. அதனை மறுத்துள்ள ரஷ்யா, இதற்கு முழுப் பொறு[ப்பும் அமெரிக்காதான் என்று குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு ஆதாரமாக மைக்ரோ சாப்ட் டின் பிராட் ஸ்மித்தின் அறிக்கையை முன் வைக்கிறது. 

ரஷ்யா' சொல்வதிலும் தவறில்லையென்றே தோன்றுகிறது. அமெரிக்காவின் இணையவழிப் பாதுகாப்பிற்கான, என்.எஸ்.ஏ என்கின்ற தேசிய பாதுகாப்பு அமைப்பின் முக்கியக் கம்ப்யூட்டரில் இருந்துதான் இந்த வைரஸ் திருடுப் போய் உள்ளது. இந்த வைரஸை அமெரிக்கா எதற்காகக் கண்டுபிடித்தது என்பதுதான் உலக நாடுகளின் முக்கியக் கேள்வி.

இதனிடையே கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மேத்தா என்பவர்,  வான்னாக்கரை மென்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகள் ,வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்களான, லாசரஸ் குழுமம் பயன்படுத்தும் குறியீடுகளைப் போன்றிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள்தான் செய்துள்ளார்கள் என்பதை அறுதியிட்டு கூறமுடியவில்லை.

அதே சமயம் இதனை ரஷ்ய மென்பொருள் பாதுகாப்பு குழுமம் வரவேற்றிருக்கிறது, இதனைக் கொண்டு மேலும் சில தரவுகளை சேகரிக்க இது பயன்படலாம் என்று கூறியுள்ளது. இதன் உள் அரசியல் வடகொரியாவை உலக நாடுகளின்ன் பால் தாழ்வான பார்வையை கொண்டுவருவதாகவும் இருக்கலாம்.

wanna cry க்கான பட முடிவு

இதனை வைத்தே லாசரஸ் குழுமத்தின் மீது பழியைப் போடமுடியாதென்றும் வைரஸை என்.எஸ்.ஏ விலிருந்து  திருடியவர்களுக்கு, லாசரஸின் குறியீடுகளை திருடுவதொன்றும் பெரிய வேலையில்லையென்று - நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இது சம்பந்தமான விழிப்புணர்விற்கு மத்திய அரசு குறும்படம் ஒன்றை, //webcast.gov.in/cert-in/ என்ற இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.  

வின்டோஸ் எக்ஸ்பி போன்ற காலாவதியான இயங்குத் தளங்களைத்தான் இது தாக்குவதாகத் தொழில் நுட்ப வல்லூனர்கள் சொல்கிறார்கள். இந்த வைரஸ் தேவையில்லாத இமெயில் மூலமாகவும் , தேவையற்ற ஆப்புகள் மூலமாகவும் எளிதில் நுழைந்துவிடும். உடனே தகவல்களைத் தங்கள்வசம் கைப் பற்றி வைத்துக் கொண்டு கம்ப்யூட்டரின் ஓரத்தில் ரெட் அலர்ட் செய்யும். தகவல்கள் பெற வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்டப் பணத்தை டாலராகப் பிட்காயின் வழியாகப் பெற நடவடிக்கை மேற் கொள்ளும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் செலுத்தாவிட்டால், பணம் இரட்டிப்பாக்கபடும். பிறகும் தரவில்லையென்றால் தகவல்கள் அழிக்கப் படும் . 

இந்தியாவில் அவ்வளவாகப் பாதிப்பில்லையென்று சொல்லும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். இதனைப் பற்றி விரிவான வெள்ளை அறிக்கைச் சமர்பிப்பாரா என்பது தெரியவில்லை. 

இந்தியாவில்  சென்னை,பெங்களூர், கேரளா, குஜராத், டெல்லி, மும்பாய் போன்ற நகரங்களையும் விட்டு வைக்கவில்லை என்பதும் அதே அளவிற்கு உண்மை என்பது செய்தி ஊடகங்கள் மூலமாக அறியமுடிகிறது. 

ஆக, இந்தக் கடுமையான இணையத் தாக்குதலுக்கு முக்கிய காரணமே, உலக நாடுகளின் நாட்டாமை அமெரிக்காதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

மு.முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts