Tuesday, 2 May 2017

சிற்றிதழ்களின் உலகம்



பூக்களை இரசிக்கும் உள்ளம், காம்புகளைக் கண்டு கொள்வதேயில்லை! '
இன்று வாசிப்பு உலகத்தில் எத்துணையோ ஜனரஞ்சக பத்திரிக்கைகள் வந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவைகளின் ஜனனபூமி 'சிற்றிதழ்கள்'தான் என்பதை நாம் அறியாமல் கடந்து சென்றுவிடுகிறோம்.

எனக்கான முகநூல் நண்பர்களில் குறிப்பிடத் தக்கவர் 'கிறிஷ் இராமதாஸ்' அவர்களும் ஒருவர். அவர் சிற்றிதழ்களின் மேன்மைக்காகவும், அழிந்துபோன சிற்றிதழ்களின் ஆவன காப்பாளராகவும் திகழ்கிறாரென்றால் அது மிகைக் கிடையாது. நானும் அவரோடு தொடர்ந்து ஒரு பார்வையாளனாகவே பயணிக்கத் தொடங்கினேன். பிறகுதான் புரிந்தது, அவர் ஒரு கடலை சேமிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது.

நானும் என் பள்ளிபருவத்தில் 'பனிமலர்' என்ற கையெழுத்து சுற்று பிரதி நடத்தியது நினைவிற்கு வந்தது. அதுதான் பின்னாளில் என்னையும் ஒர் எழுத்தாளனாக வழி நடத்தியது.

இதனைப் பற்றி மேலும் சில தரவுகளைத் தேடி பயணப் பட்டேன். அப்போதுதான் நூற்றுக் கணக்கான சிற்றிதழ்கள் பயணப்பட்டதை அறியமுடிந்தது. அவற்றின் பயணக்காலங்கள் குறைவில் முடிந்து போயிருக்கலாம். ஆனால் எழுத்து உலகின் விதைகள்தாம் அவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சிற்றிதழ்களின் நோக்கம், ஜெயமோகன் போன்றவர்களால் விமர்சிக்கப் பட்டிருந்தாலும் ,அவை சுதந்திர களத்தில் நின்று போராடிய போராளிகள் என்பதுதான் உண்மை.
அவை வியாபர நோக்கத்தை விட்டு விலகி, நஷ்ட கணக்கில் உட்கார்ந்து கொண்டு , சுதந்திரமாகப் போராடியவை. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிப் பேசும் ஊடகமாகச் செயல் பட்டன.இங்குதான் அதிகளவில் கதை சொல்லிகளும், கவிதை சொல்லிகளும் உருவானார்கள். விசித்திர பெயர்களைத் தாங்கிவந்து வாசிப்பை மேன்மை செய்ததில் சிற்றிதழ்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

சிற்றிதழ்களை பற்றி எழுதும்போது சுகன் என்கின்ற க.சுந்தர சரவணனை பற்றி எழுதாமல் கடக்க முடியாது. 1987 முதல் தனது தனது மறைவு காலமான 2015 வரையிலான 28 ஆண்டுகளும் கடும் கஷ்டங்களுக்கிடையேயும் " சுகன்" என்ற சிற்றிதழை நடத்தியவர்.
சிற்றிதழ்களை ஆவன படுத்துவதில், கவிஞர் வெற்றி பேரொளியுடன் சேர்ந்து பயணப்பட்டதை சிற்றிதழ்கள் உலகம் மறக்காது. இவரது இதழில் பல மூத்த படைப்பாளிகள் எழுதிய அதே சமயத்தில் வா.மு.கோமு, ஜாகீர் ராஜா போன்ற புதிய படைப்பாளிகளும் அவருடைய 'சுகன்' என்ற வீட்டிற்குள்ளிருந்துதான் வந்தார்கள்.

இன்றைய ஆனந்தவிகடன் அன்றைய ஆனந்தபோகினி என்ற சிற்றிதழ்தான் என்பதை எப்படி மறக்கமுடியும்? அதன் ஆயுள்காலம்கூட அதிலிருந்துதான் கணக்கிடப்படுகின்றது.
சி.சு செல்லப்பா அவர்களால் தொடங்கப் பட்ட "எழுத்து" ( 1958) என்ற சிற்றிதழை பலர் முன்னிலை படுத்தினாலும், 1907 ல் அயோத்திதாசர் அவர்களால் தொடங்கப்பட்ட 'ஒரு பைசாத் தமிழன்' சிற்றிதழை பற்றி மறைத்துவிடுகிறார்கள். அந்த இதழ் பிராமண எதிர்ப்பை முழுமையாகத் தாங்கிவந்தது. சமூகச் சிந்தனைகளைப் பேசியது. அப்போதே சாதி எதிர்ப்பிற்கான கவிதைகளை, கட்டுரைகளை வெளியிட்டது.

இது மட்டுமில்லாமல் 1871 ல் பஞ்சமர் 1893 ல் பறையன் போன்ற பெயர்களைத் தாங்கிய சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன. 1907 ல் சொப்பனேஸ்வரி அம்மாள் என்ற பெண்ணால் 'தமிழ் மாது' என்ற சிற்றிதழும் வெளிவந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.1946ல் ஒரு முஸ்லிம் பெண்மணியால் துவங்கப்பட்ட 'முஸ்லீம் முரசு' என்ற சிற்றிதழ் 70 ஆண்டுகளைக் கடந்தும் பல பொருளாதாரக் கஷ்டங்களுக்கிடையே இன்றும் நடந்துவருகின்றது..

1980ல் இலங்கையில் தொடங்கப்பட்ட 'வானம்பாடி' என்ற சிற்றிதழும் கவனிக்கப் படவேண்டிய ஒன்று. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் நடத்தப் பட்ட அந்த இதழ் தமிழர்களின் அவலங்களையும், சுதந்திரத்திற்கான எழுத்துகளையும் தாங்கி வந்துள்ளதாக அறியமுடிகிறது.

இன்றும் கூடப் பாரவி என்பவரால் நடத்தப்படும் 'தளம்' சிபி செல்வனின் 'மலைகள்' இராஜ கோபால் மீனாட்சி சுந்தரத்தின் ' நாண்காவது கோணம்' வித்தியாசமான பார்வைகளைத் தாங்கி வருகிறது.காலச்சுவடு, உயிர்மை போன்ற சிற்றிதழ்கள் பெரும்பான்மை வாசகர்களைக் கொண்டு, இன்றும் இயங்கிவருகின்றன. இதில் மேலும் சில சிற்றிதழ்களைப் பற்றி இடமின்னமைக் காரணமாகவே குறிப்பிடவில்லை

இன்றும் அரையாண்டிதழாக வரும் 'பெயல்' என்ற சிற்றிதழ் இலாப நோக்கமில்லாமல், ஆராய்ச்சி மாணவர்களுக்காகவே எம்.செந்தில் குமார் என்பவரால் நடத்த பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இப்போது , இணையவழி பறிமாற்றங்கள் தொடங்கிய பிறகு , சிற்றிதழ்களின் பார்வையும் மேலோங்கியுள்ளதை காணமுடிகிறது. அதே நேரம் சிற்றிதழ்களை நேசிப்பதும் வாசிப்பதும் நமது கடமையென்றே கருதுகிறேன்.

ஒரு சில சிற்றிதழ்களைத் தவிர, சிற்றிதழ்களெல்லாமே தூக்கியெறியும் குப்பைகளாக இருந்துவிடுவதில்லை. அவை என்றென்றுமே புத்தக அலமாரிகளின் பொக்கிஷங்களகவே இருக்கின்றன.

இனிய உதயம்(ஏப்ரல் 2017)

-- மு.முகமது பாட்சா. 

No comments:

Post a Comment

Popular Posts