Tuesday, 2 May 2017

அவளுக்கென்ன !

நான் யதோச்சையாகத் தான் அவளைப் பார்த்தேன். நான் தினமும் போகும் அதே மின்சார ரயிலில் வருவாள். சற்று பூசிய அழகு தான். யாரும் பார்க்காமல் திரும்ப முடியாது.

முதலில் சாதாரணமாகத்தான், இருவரும் பார்த்துக் கொண்டோம். ஒரு நாள் என் எதிரில் அமர்ந்திருந்தாள். என் கையில் சுருட்டி வைத்திருந்த விகடனை பார்த்து விட்டவள் , படித்துவிட்டுத் தருவதாக கேட்டாள். மின்சார ரயில்களில் இது சகஜம்தான் என்பதால் .  நானும் கொடுத்தேன்.

புத்தகத்தை படித்துக் கொண்டே அடிக்கடி என்னையும் பார்த்தாள்.அந்தப் பார்வை என்னை என்னமோ செய்தது! கெத்தை மெயிண்டன் பண்ண,   நானும் கவனிக்காதது போலவே உட்கார்ந்திருந்தேன்.

அவள் வழக்கமாக இறங்கும் இடம் கிண்டி வந்ததும் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, "தாங்க்ஸ்' என்ற ஒற்றை வார்த்தையில் வெளியேறினாள்.

அடுத்த நாளும், நான் எதிர் பார்க்கவில்லை, அவள் என் எதிரில் தான் அமர்ந்திருந்தாள். அவள் பார்வையை புரிந்துக் கொண்டவனாய் அவள் கேட்காமலேயே கையில் வைத்திருந்த குமுதத்தை அவள் கைகளுக்கு இடம் மாற்றினேன்.

Train-she and he hd painting க்கான பட முடிவுசின்னப் புன்னகையை சிதறவிட்டவள். மீண்டும் என்னை அடிக்கடி பார்த்தாள். அவளின் செய்கைகள் எனக்கு புரியவில்லை. என்ன தான் நண்பர்களிடமும், சோஷியல் மீடியாக்களிலும் பெண்களை, ஆண்கள் கலாய்த்தாலும், நேரில் பேசும் போதும், நேருக்கு நேராக சந்திக்கும் போதும் நிறைய ஜாக்கிரதை உணர்வுகள் தேவைப்படுகின்றது.

கிண்டி வந்ததும்,"புத்தகத்தை நாளை கொண்டு வந்து தரட்டுமா?" என்று அதிக உரிமை எடுத்துக் கொண்டாள். என்னால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. சரியென்று தலையாட்டி வைத்தேன்.

இன்றும், சரியாகச் சொல்லி வைத்ததுப் போலவே  எதிரில் அமர்ந்தாள். அதே மாறாதப் புன்னகை வீசினாள். நானும் வேறு வழியில்லாமல் என் புன்னகையை அவளுக்கு தர வேண்டியதாயிற்று. நேற்றைய குமுதத்தை திருப்பி தந்தவள் 'தாங்க்ஸ்' என்றாள். நான் சிறு  புன்னகையோடு பெற்றுக் கொண்டேன்.

"இதில் உள்ள 'மரமேறி' கவிதையை படித்தீர்களா?" என்றாள். எனக்கு கவிதைகளில் அவ்வளவு நாட்டம் கிடையாது என்றேன். "எனக்காக படித்துப் பாருங்கள்" என்றாள். நானும் வாசித்து பார்த்தேன் . புரிகிற மாதிரிதான் இருந்தது அந்தக் கவிதை. பெண்களின் அவலத்தை ஒரு மரமேறியோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட கவிதை அது. நன்றாகவே இருந்தது.

"நன்றாக இருக்கிறது!"  என்றேன்.

"இது, நான் எழுதியக் கவிதைதான் " என்றாள்.

இப்போது அவளின் பெயரை தெரிந்துக் கொள்ள ஆவல் வந்தது. புத்தகத்தில் பார்த்தேன். - 'கண்ணம்மா' என்றுச் சொன்னது.

"பெயர் ரொம்ப கர்னாடகமாக இருக்கே!" -  என்றேன்.

"பாரதியை எனக்கு பிடிக்கும். அவரின் கவிதை நாயகியின் பெயர் தான்" என்றாள்.

"நீங்கள் இப்போதுதான் எழுதுகிறீர்களா?" 

"நான் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறேன்" என்றவள் ஒரு படத்தின் பெயரைச் சொல்லி அதில் வரும் ஒரு அட்டகாசமானப் பாட்டை தான் தான் எழுதியதாகச் சொன்னாள்.

இப்போது அவளின் மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. இருந்தாலும், ஏன் என்னிடம் வலிய வந்துப் பேச வேண்டும்? சந்தேகம் வராமலில்லை. அவளிடம் எப்படிக் கேட்பது? 'ஆண்களே இப்படிதான்! வலியப் பேசினால் சந்தேகபுத்தித் தலைக் காட்டும்!' என்று முகத்தில் அறைந்ததுப் போல் சொல்லிவிட்டால்! கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை.

கிண்டி வந்தும் இறங்கவில்லை. என் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவளாக  ," இன்று, மாம்பலம் வரைப் போக வேண்டும். ஒரு பாட்டொன்று கம்போஸிங்" என்றாள்.

"யாருடைய படம் ?" என்றேன்.

'ரவியுடைய படம் தனியொருவன் பார்ட் 2 ' என்றாள், கூடுதலாக தன் பாடலை, பாடகி பத்மலதா பாடப் போவதாக வேறு சொன்னாள்.

எவ்வளவு அடக்கமாக இருக்கிறாள்! இத்தனைத் திறமைகள் இருந்தும், அகந்தையில்லாமல் சாதாரணமாகப் பேசுகிறாள்! – வியந்துதான் போனேன்.

நட்பின் பரிமாணங்கள் நீண்டு வளர்ந்தன. அவள் சிரிப்புகளில் நானும் மெதுவாகக் கரைந்துக் கொண்டிருந்தேன். நாங்கள் இப்போதெல்லாம் கடற்கரை, சினிமா என்றெல்லாம் சுத்த ஆரம்பித்து விட்டோம் . அவளின் சின்ன சின்ன பரிசங்களில் என்னை நான் தொலைக்க தொடங்கியிருந்தேன்

இதுதான் காதல் என்பதா? ச்சேய் , இது மாய அவஸ்தையடா !

இன்றும் அவளை எதிர்ப்பார்த்தேன். அவள் வரவில்லை! 'ஒருவேளை, அவளுக்கு உடம்பு சுகமில்லாமல் போயிருக்குமோ? ' மனம்  நிலைக் கொள்ளாமல் தவித்தது.

நாட்கள் பத்தைக் கடந்தும் அவளிடமிருந்து எந்த ஒருத் தகவலும் இல்லை. கைபேசி எண் அணைக்கப்பட்டிருந்தது. தன் வீட்டில் உள்ளவர்கள் பழைமைவாதிகள் என்றும் அவர்களுக்கு தான் வேலைக்கு செல்வதே பிடிக்கவில்லை யென்றும் ஒரு தடவை என்னிடம் சொல்லியிருந்தாள்.

ஒருவேளை அவள் என்னுடன் சுற்றுவது அவள் குடும்பத்திற்கு தெரிந்து, வீட்டுச் சிறையில் வைத்துவிட்டார்களா?! - என்று என் மனம்  சிந்திக்க தொடங்கியது.

அம்மா வேறு அடிக்கடி கேட்கிறாள், "ஏன்டா, உனக்கு என்னதான் ஆச்சி,  இப்படி தாடியும் மீசையுமா அலையற?"

"நேரமில்லைம்மா" -என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு என்ன நான் சொல்வது?

இன்று  நாளிதழொன்றில் வந்திருக்கும் செய்தியை படித்தவுடன் எனக்கு தலைச்சுற்றலே வந்துவிட்டது!

ஆம், அவளைப் பற்றியச் செய்திதான். அவளையும் அவளோடு மேலும் இரண்டுப் பெண்களையும் காவல்துறை கைது செய்திருந்தது. நிறைய இடங்களில், தான் டாக்டர் என்றும் அரசு அதிகாரிகளென்றும் பொய்ச் சொல்லி ஏமாற்றிவிட்டு கம்பி நீட்டி விடுவார்களாம். அதில் வந்த படத்தில்,  வெட்கமே இல்லாமல் அதே புன்னகையுடன்தான் அவள் இப்போதும்  சிரித்துக் கொண்டிருந்தாள்!

எப்படி ஏமாந்திருக்கேன் பார்த்தீர்களா? நினைக்கவே வெட்கமாக இருக்கிறது...

'அட வுடுங்க பாஸ்! நல்ல வேளை தப்பிச்சீங்க!'  என்று நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகவே கேட்கிறது. கொசுவர்த்தி சுருளை சற்று வேகமாக சுற்றிவிட்டு பார்த்தால்தான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்.

தன்னுடைய கவிதை புத்தகம் ஒன்றை போடுவதற்காக ரூபாய் முப்பதாயிரம் குறைவதாகவும், என்ன செய்வது என்றேப் புரியாமல் குழம்புவதாகச் சொன்னாள். நான் தான் தான் தாராள மனசுக்காரணாயிற்றே! அதுவுமில்லாமல் அவளுடைய காதலை அடைவதற்காக துடித்துக் கொண்டிருந்த நேரம் வேறு. "கவலைப் படாதே, நான் தருகிறேன்" என்றேன்.

"ஏன் உங்களுக்கு சிரமம், பரவாயில்லை..." என்றாள்.

நான் தான் சும்மா இல்லாமல் " நீங்கள் பிறகு திருப்பிக் கொடுத்தால் போதும் " என்று வலுக்கட்டாயமாக, நாலு வட்டிக்கு கடனை வாங்கி அவள் கையில் திணித்தேன்.

இப்போது புரிந்திருக்குமே? என் நிலைமை.

'ச்' கொட்டாதீங்க பாஸ். இந்த தாடியை, வாங்கின கடனை அடைக்கிற வரைக்கும் எடுக்கவே முடியாது! 

'அவளுக்கென்ன ஓடிவிட்டாள், 
அகப் பட்டவன் நானல்லவா!’

நானும், நல்லாவே கவிதை எழுதுகிறேனா பாஸ் ?
         * * *


–மு.முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts