
கைகளைத்
தொட்டுவிடத் துடித்தார்கள்
தலைவனின் சிரிப்பிற்குள்
விழுந்திடத் துடித்தது கூட்டம் ,
பார்வையில்
பட்டுவிடவே ஏங்கினார்கள்,
கனவுகளின் மாயைக்குள்
காலூன்றி நடந்தவர்கள்...
சகதிகளை மறந்து போனார்கள்,
கையசைவில் எழுந்தது
'ஹோ...' என்ற பெரும் கூச்சல்,
'தலைவா!' என்றே
சிலர் எகிறிக் குதித்தார்கள்,
தலைவன் சொன்ன கதைக்கு
கை தட்டி மகிழ்ந்தார்கள்,
உணர்ச்சி பெருக்கில் ஒருவன்,
'நீங்கள்தான் அடுத்த முதல்வர்' என்றான்
தலைவனின் பார்வை
அவனை மட்டும் ஆசிர்வதித்தது,
ரசிகனின் வீட்டில் அடுப்பெரிகிறதா
என்றே தெரியாத தலைவன்,
நல்ல நடிகனாக மாறி
'நான் அரசியலுக்கு வருவேன்'
என்று முழங்க,
வீட்டுவேலை செய்யும்
ராமாயியம்மா மகன் தண்டச்சோறு
உபயத்தில்...
பட்டாசுகள் சரமாரியாக வெடித்தது !
பின் குறிப்பு :
தலைவரின் அறு நூறுகோடி பட்ஜெட்டின்
அடுத்தப் பட அறிவிப்பும்
அங்குதான் நடந்தது !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment