
முள்ளாய்த் தைத்த இரணத்தை
கிளறிப் பார்க்கிறோம்...
வடுக்களும் ஆறவில்லை
வலிகளும் கூட புதிதில்லை...
அன்றுதான் இராட்சசப் புத்தன்கள்
இரத்த நாவுகளை
சுழற்றிக் கொண்டே திரிந்தார்கள்,
புறாக்களெல்லாம்
மாமிசங்களைக் கொத்தித் தின்றன,
அலறலோசைகளில் உச்சத்தில்
பீரங்கிகளின்
சப்தங்கள் முடங்கிப் போயின,
மனிதம் செத்து, இராட்சசம்
கடவுளாய் அவதாரமெடுத்தது...
யோனிப் பிளந்த
எம் பெண்களின் தேகங்களில்
ஓநாய்களின் எச்சில்கள்
ஒட்டிக் கொண்டிருந்தன...
காணாமல் போனவர்களை
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம்,
எந்த மண்ணில்
எங்கே புதைந்தார்களென்று
- முகமதுபாட்சா
No comments:
Post a Comment