Thursday, 18 May 2017

ஞானரசம்

sufi art க்கான பட முடிவு

அவனொரு சூஃபிக் கவிஞனென்று அறிந்து கொண்டேன் 
என்னெதிரில்தான் அவன் அமர்ந்திருந்தான் 
கண்களை அரைத் தூக்கத்தில் அலையவிட்டவன் 
ஞானக் கோப்பையில் வழிந்த 
மதுரசத்தைச் சுவைத்துக் கொண்டே 
ஒரு கவிதை பாடிக் கொண்டிருந்தான் 
நான் அவனைப் பார்த்துக் கொண்டே 
ஆசையின் பழரசத்தை ருசித்துக் கொண்டிருந்தேன் 
அவன் கோப்பையில் என்னாசை இடறிவிழுந்தது 
எச்சில் கோப்பையையெடுத்து சிறு துளி மிடர்ந்தேன் 
எட்டாத கசப்பைத் 
தொட்டுச் சுவைத்ததாய்த் துடித்தது தொண்டை... 
அவன் தன் சிரிப்பைத் தாடியில் வழித்தான் 
'ஞானம் கசக்குமா?' என்றேன் 
நோய் பிடித்த தேகத்திற்கு மட்டுமென்றான் 
'உனக்கு மட்டும் இனிக்கிறதா?' 
இடைவெளிவிட்டு உரைத்தான், 
'ஆசையைக் கழுவிவிட்டு அருந்து உனக்கும்கூட 
இனிக்கும்' 
'ஞானமும் ஓர் ஆசைதானே ? !' 
'அஃது ஆசையேயில்லாத வெற்றுக் கிண்ணம் 
உன் பார்வையில் கோளாறு' என்றான் 
அப்போதுதான் அவன் கோப்பையைக் கவனித்தேன் 
அஃது அவனைப் போலவே காலியாகத்தானிருந்தது. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts