Saturday, 5 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 18


.கிராமம் 



சந்துகள்; சிறிய வீடு 
செந்நிற சீமைஓடு 

பொந்துகள் புதர்கள் மண்டி 
பூமியில் குப்பைகூளம் 

வந்திடும் கோழி,சேவல் -தன் 
மக்களின் கூட்டத்தோடு. 

கொந்திடும் புழுதி தன்னை 
கொத்திடும் புழுக்கள்தன்னை 

பன்றிகள் எங்கும் சுற்றும் 
பாதையில் முட்கள் குத்தும் 

கன்றிடும் பாதம் சின்னக் 
கற்களின் இடறலாலே 

சென்றிடும் ஊர் சனங்கள் 
தோட்டத்தில் வேலைசெய்ய 

நின்றிடும் கிராமம் அந்தோ 
நிசப்தத்தின் பிடியில் சிக்கி 

போரிடப் பொழுது உண்டு 
பிடித்து நாம் தள்ளினாலும் 

யாருக்குத் திறனுண்டென்று 
அது நகராது நிற்கும் 

பேருக்கு எஞ்சியுள்ளோர் 
பேசிட வந்தால் அந்தப் 

போருக்கு முடிவுமில்லை 
அப்புலம்பலில் பொருளுமில்லை 

சினைக்கெனப் பசுவின் சப்தத் 
தொடர் ஒரு சுருதி கூட்டும் 

பனைக்கரப் பசும் விரல்கள் 
வாழ்வெனும் யாழை மீட்டும் 

தினைக்கதிர் தலையசைக்கும் 
சாரியாய்த் தென்னை நிற்கும் 

எனக்கொரு பொழுதுபோக்காய் 
இவை சிலநாள் இருக்கும். 

- கவிதாயினி பூரணி

1927 முதல் கவிதைகள் எழுதிவந்த பூரணி அவர்கள் 
சிறுகதைகள்,கட்டுரைகளும் நிறைய எழுதியுள்ளார் . 
இவர் எழுத்தாளர் கிருஷாங்கினி அவர்களின் 
அம்மாவும் ஆவார்.

No comments:

Post a Comment

Popular Posts