Sunday, 6 August 2017

மாயவனத்தின் புராணக் கதைகள்

Related image

மாயவனத்தில் 
மகிழம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, 
இயந்திரப் பறவைகள் பூமிக்குள் துளையிட்டு 
கனிமம் குடிக்கின்ற வேளையில் 
நச்சுக் காற்றை ஊதும் சர்ப்பக் குஞ்சுகள் 
தேசத்தின் நலனென்று தூக்கிப் பிடிக்கின்றன, 
சாத்தான் தன் நாவுகளை வெட்டி 
பூமியெங்கும் தூவி கொண்டிருக்க.... 
கள்ளிப் பழங்கள் 
தேசியக்கனியெனப் பிரகடனம் செய்யப் படுகிறது, 
அடையாளமிழந்த மனிதர்கள் 
அடையாளங்களைத் தேடிக் கொண்டிருக்க, 
அகழ்குழிகளுக்குள் கிடக்கும் எலும்புக்கூடுகள் 
புராணக்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றன, 
போதிமரத்தில் முளைத்த முட்களை 
புத்தன் வெட்டிக் கொண்டிருக்க.... 
தீக்குளிக்கும் நாடகத்தில் ஒப்பனையில்லாத தீ 
நாடக அரங்கைக் கொழுந்துவிட்டு எரிக்கிறது, 
சீதையோடு இராமனும் இறந்துவிட்டதாக 
சக நடிகர்கள் அழுகிறார்கள்... 
இப்போது 
ஒவ்வொருவர் விரல்களிலும் பற்கள் முளைக்கின்றன, 
பாய்வதற்குத் தயாராகிறார்கள்... 
சாத்தான் தன் தேசத்தைக் காப்பாற்ற 
யாக குண்டத்தில் வேள்வித்தீ ஏற்றுகிறான்... 
அவிப்பாகங்களாக மனிதக் கறிகள். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts