
நிழலுருக்கிச் சிற்பம் செய்கிறேன்,
அது நீட்சிமையில் நகர்கிறது,
வானுயர்ந்து வடிவம் காட்டுகிறது,
தானென்ற ஆங்காரம் சூடிக் கொள்கிறது,
காண்பனவற்றைக் கவர்ந்து கொள்கிறது,
ஏளனத்தில் எள்ளி நகைக்கிறது,
வார்த்தைகளை வாசம் நீக்கி
அள்ளித் தெளிக்கிறது...
நானும் நிழலுருவும்
இப்போது தள்ளித்தான் வசிக்கின்றோம்,
'நீ நிழல்தான்
சற்றே அடக்கி வாசி' என்கிறேன்,
அடங்காமலென்னைக் காலால் மிதித்து
பூமியில் புதைக்கிறது,
நான் முளைத்து எழுகிறேன்....
முட்டாள் நிழல் இப்போது
கருத்து சிறுத்துக் கைக் கட்டி நிற்கிறது...
காற்றைப் பிடித்து
கவிதையெழுதிக் கொண்டிருக்கிறேன்...
காலருகில் உட்கார்ந்து
வார்த்தைகளை எடுத்துக் கொடுக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment