காலமும், தூரமும்.

இரட்டைத் தண்டவாளங்கள்,
இங்கொன்றும், அங்கொன்றுமென
இடையில் நடைமேடை
இதில் சில நேரமும், அதில் சில நேரமும்
நீளத் தொடர்வண்டியின் நீல நிறமும்,
நீளக் குழல் ஒலியும்.
கடந்து கடந்து போகின்றன
வெவ்வேறு சமயத்தில்.
நிமிடங்கள் வித்யாசத்தில்
எதிர் எதிர் திசையில்
காற்றின் கிழிப்பும் எதிரெதிராக.
இரண்டிலும் ஒரே நேரத்தில்
நான் நடை மேடையில் நடுவில்
என்று நடைபெறும்? எப்படி இருக்கும்?
மூச்சு முட்டுமா? என்னை
இரண்டுமாக நசுக்கிவிடுமா?
கைவிரித்துப் பரப்ப இரண்டும்
கைகெட்டும் தூரமா?
என் மீது சரியுமா? என்னை உள் உறிஞ்சுமா?
வேகக் காற்று வீசித் தடுமாறுமா?
தனித்து விடப்படுவேனோ?
காரிருள் பரவுமோ?
வரும் வண்டியின் வேகத்தையும்,
நடைமேடையின் நீளத்தையும்
கூறி, நடைமேடையைத் தொடர்
வண்டி கடக்கும் நேரம் காண்.
கணக்கு கையில் பிரம்புடன்.
ஒரு நாள்
இருபுறமும் பச்சை விளக்கு.
கண் மூடிக் கொள்ளாமல், ஐம்புலன்களையும்
மனத்தையும், கணக்கையும் அகலத்
திறந்து காத்திருந்தேன்.
ஜன்னலிடப்பட்ட
மேற்கூரையற்றது என
வழக்கில் சிக்கி நீண்ட நெடுங்காலம்
காத்திருக்கும் வாழ்ந்த கூரையற்ற வீடென
வேகமாக நகர்ந்தன இருபுறமும்.
என்னையும் நடைமேடையையும்
எனக்கு அப்பாலும், அதற்கு அப்பாலும்
கடந்து கடந்து சென்றன.
எதிர், இறந்த காலமென வாழ்க்கையாய்.
உள்ளும் புறமும் ஏதும் நிகழவில்லை.
கடந்த பின்னும், கடக்கும் போதும்.
.
கவிதாயினி கிருஷாங்கினி (பூரணி பாட்டியின் மகள்)
No comments:
Post a Comment