
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
.
- கணியன் பூங்குன்றனார்
--------------------------------------------------------------------
கால் பதிக்குமிடமெல்லாம்
நான் வசிக்கும் இடமாகும் !
நான் வசிக்குமிட மாந்தர்,
என் தோளுரசும் உறவாகும் !
துன்பமொன்று வருதல் கூட
பிழை திருத்தும் விடையமன்றோ !
வந்துதித்த வாழ்வுமிங்கே
வாழ்வென்றே யாகிடுமா ?
சென்று விட்டால் வாழ்ந்த வாழ்க்கை
சரியென்றும் போகிடுமா ?
கடும் காற்று, இடி,மின்னல்
துன்பமென்றே நடுங்கும் வேளை
இன்பம் தரும் சுக மழையும்
இனிதாகத் தான் பெய்யும் !
துவன்று நின்ற பயிர் வகையும்
துள்ளலாய்த் தலை நிமிரும் !
துன்பம் படும் மாந்தருக்கோ,
உதவிச் செய்யும் மழையாக
பிறவிப் பயன் மாற வேண்டும் !
இவனன்றோ பிறப்பென்று
ஊர், உலகும் விழைதல் வேண்டும் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment