Saturday, 5 August 2017

காத்திருக்கிறேன்


No automatic alt text available.

வார்த்தைகளைக் 
கடத்தி வைத்திருக்கிறேன் 
ஒவ்வொன்றாகத்தான் விட முடியும், 
உன் விழிக் கோள்களிரண்டும் 
என்னிதயத்தையே 
ஏன் சுற்றி வருகின்றன? 
படிமங்களுக்குள் நுழைந்து கொள்கிறாய் 
வார்த்தைகளால் மீட்டெடுக்கிறேன், 
உன் தூக்கத்தின் நாளங்களை 
என் நுண்ணரும்புகள் இசைக் கூட்டுவதை 
எப்படித்தான் மறுக்கப் போகிறாய்? 
கர்ப்பக் குருடனுக்கும் 
கண் பார்வைக் கொடுத்தவள் 
நீயாகத்தான் இருக்க முடியும்... 
கள்ளிப் பழம் சுவைக்கும் ஒட்டகத்திற்கு 
காயங்களும் பெரிதில்லை 
கண் பார்வையும் தேவையில்லை, 
தடயங்களை விட்டுச் செல்கிறேன் 
நீயென்னைத் தேடி வருவதற்கு, 
மௌனம், காதலின் மொழியென்றாலும் 
கண்களாவது பேசிக் கொள்ளவேண்டும், 
இருட்டை 
குடையாகப் பிடித்து நடக்கிறேன் 
வெளிச்சத்தை 
எங்கேயாவது விதைத்திருப்பாயென்று, 
பட்டாம் பூச்சிகளை 
பறக்க விட்டிருக்கிறேன் 
வண்ணங்களையாவது கூட்டியனுப்பு. 
காத்திருக்கிறேன்... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts