
மெளனத்தைப் பிசைந்து
செய்யப்பட்ட குகை ,
காற்று வந்து சப்தத்தை
ஊதி விட்டுப் போகிறது,
அந்தப் பறவைகளுக்குத் தெரியாது,
இது புத்தனின் போதி மரமென்று,
சப்தமிட்டு பேசிக்கொள்கின்றன,
எழுத்துப் பிழைகளில்
உதறிப் போட்ட கவிதையொன்று
காற்றில் படபடக்கிறது
வழிப் போக்கன் ரசித்துப் படிக்கிறான்
சந்தக் கவிதையை,
இலைகள் அசைக்காத மரத்தை
சபிக்கிறான் பயணக்காரன்,
காற்றே வரவில்லை,
துப்பாக்கிச் சப்தங்களில்
பதுங்கி கிடக்கும் பொது மக்கள் ,
திவிரவாதிகள் திறந்த வெளியில்,
சைரன் வண்டிகள்
சரசரவென்று வருகின்றன ,
வாகனத்தில்
வாக்கு கேட்டு நடந்த மந்திரி,
வறுமைக்காரன் அழுகையும்
வசதிக்காரன் சிரிப்பும் கூட
சப்தங்களின் கூட்டில்தான் வாழ்கிறது,
சப்தமிட்டு அழும்
குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும்
அம்மா நிச்சயம் பால் கொடுப்பாள்,
சப்தங்கள் விரிகின்றன
மெளனங்களென்பது
மாயைகளென்று சொல்லிக் கொண்டு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment