
இறந்து கிடக்கும் என்னை விட்டெழுந்து
ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறேன் ,
ஓயாத அழுகைகளில் ஒன்றிரண்டைத் தவிர
அத்தனையும் போலிகள் ,
வாங்காத கடனை நான் வாங்கியதாய்
பொய்ச் சொல்லியொருவன் அழுகிறான் ,
என்னையே பார்க்காத ஒருவன்
என்னிடம் பேசியதாக கதை விடுகிறான் ,
இல்லாத சொத்துக்காக இருவர்
கணக்கிட்டு அழுகிறார்கள் ,
இருக்கும் உறவுகளில் சிலர்
செலவிற்குப் பயந்தும் நழுவுகிறார்கள் ,
இதுதான் வாழ்க்கையென்று ஒருவன்
இருப்பைச் சொல்லிவிட்டு அழுகிறான் ,
இதுவா வயதென்று ஒருவன்
சொல்லிச் சொல்லியே மாய்கிறான் ,
நான் முட்டாளாய் வாழ்ந்ததாகவே
ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான் ,
இத்தனைக்கும் நடுவே ஒருவன்
சீக்கிரமாய் எடுத்திடுங்கள்
இல்லையென்றால் நாறிவிடும் என்றே
மூக்கைப் பொத்தி நகர்கிறான் ,
ஆளுக்கொரு கதை சொல்லிகள்
இங்கேதான் வந்து எழுதுகிறார்கள்,
அவர்களும்
போகப் போகும் கதையறியாமல்
புலம்பியேத்தான் அழுகிறார்கள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment