Sunday, 20 August 2017

கோமாளிகளின் கூடாரத்தில்


Image may contain: 1 person

ஒரு வட்டத்தைப் போட்டு 
இதுதான் தேசம் என்றார்கள், 
நம்பித் தொலைத்தோம்... 
அதற்குள் 
ஆயிரம் கொடிகளை நட்டார்கள், 
கோமணத்தையிழந்தோம், 
வறுமைதான் வசதியானதென்றார்கள் 
அள்ளியும் கொடுத்தோம், 
அழகான வார்த்தைகளால் 
எங்களையும் அலங்கரித்தார்கள்... 
அசந்து போனோம், 
மதங்களைத் தீட்டி 
கைகளில் கொடுத்தார்கள்... 
மாய்த்துக் கொண்டோம், 
மொழிகளைப் பிடுங்கி 
மொழிகளைத் திணித்தார்கள்... 
உறங்கிக் கிடந்தோம், 
சமாதிகளைக் காட்டி தெய்வம் என்றார்கள் 
வணங்கி நின்றோம், 
நீரைக் கொடுத்தோம், 
நிலங்களைக் கொடுத்தோம்... 
ஆசையடங்காமல் 
எங்களையே விற்றார்கள்... 
இன்னமும் 
என்ன தேவையென்று தெரியவில்லை, 
கோமாளிகள் வேசம் தரித்து 
கூடாரத்திலிருந்து வெளிவருகிறார்கள், 
சிரித்துத் தொலைக்கிறோம் 
வேறுவழி... 
வள்ளுவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts