இவள்தான் அபரஞ்சிதா என்று
அடையாளம் காட்டி சிரித்தார்கள்...
மொட்டையடித்து மோட்சம் போகிறாளாம்
பகடித்தார்கள்,
கரும்புள்ளி,செம்புள்ளிக் குத்தியும்
இத்திணை அழகாயென்றார்கள்,
தேவர்களெல்லாம் யோகர்களென்றார்கள்,
இல்லையில்லை
அவர்கள் போகர்களென்று சொல்லிவிட்டு
எவனோவொருவன்
தன் தலை மறைத்துக் கொண்டான்,
தாசிக்குத் தயாபரன் காலடியா?
சிலர் தவித்தார்கள்...
இனி பந்திக்கு யார்
இத்திணை ருசியாய் பறி மாறுவார்களென
படுத்தவர்கள் பரிதவித்தார்கள்...
பிறகுதான் தெரிந்தது
கிளியென மாறிய விக்கிரமன்
விரித்த சூழ்ச்சி வலை இதுவென்று
கிளி சிரித்தது,
ஊர் சிரித்தது,
அடங்கா காமத்திலலைந்த குருக்கள் சிரித்தான்,
அமைதி பூசிய அபரஞ்சிதா
அப்புறமாகச் சிரித்தாள்...அடங்காமல் சிரித்தாள்...
பொட்டுக் கட்டி
பொதுவில் வைத்த பெருங்குடிகளே
படுத்து ருசித்தவர்களுக்கு
நானாவது பந்தி வைத்திருக்கிறேன்...
இந்த விக்கிரமன் கிளியாக மாறியக் கதை
தெரியுமா உங்களுக்கு...
பெண் கிளியை புணர்வதற்கே
ஆண் கிளியாய் இடம் மாறிய அற்பன்...
இவன் மோட்சம் போவானென்றால்
நானும்தான் போவேன்
என்னை மோகித்தே
விந்தினைச் சிதறித் திரிந்த கோவில் குருக்களின்
ஆராதிக்கும் தட்டை
தயாபரனும் ஆதரிப்பானென்றால்
நானும்தான் போவேன் மோட்சம்!
அடங்காமல் சிரித்தாள் அபரஞ்சிதா...
இப்போதுதான் அவள் கண்களில்
அடக்கி வைத்த கண்ணீர் வழிந்தது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment