அடர்ந்த பெரும் அடவிக்குள்
அவளின் ஆவி
இன்னமும் சுற்றித் திரிவதாக
பேசிக் கொள்கிறார்கள்,
அவள் ஓலமிட்டு அழும்போது
கானகம் உடனே தீப்பற்றிக் கொள்கிறதாம்,
நெருப்பு உமிழ்ந்த பிள்ளையென்பதால்
அவள் யாகசேனியாக இருக்குமென்றும்
நம்பப் படுகிறது
அவள் பற்றியெரிக்கும் கானகத்தை
துருபதன் கண்கள்
கண்ணீரால் நிரப்பிக் காப்பாற்றுகிறதாம்,
யார் மீதுதான்
இந்தக் கிருஷ்ணைக்கு இத்துணைக் கோபம்?
உரககேதனன் தொடையைப் பிளந்ததால்
அவனை எரிக்க இனியும் அவசியமில்லையாம்,
துச்சாதனனின் மார்புக் குருதி
கூந்தலின் தைலமானதால்
அவன் மீதும் அவளுக்குக் கோபமில்லையாம்,
கடும் சூழ்ச்சியால் காமஜயத்திரதன்
கண்டமாகிப் போனதால்,
கீசகனின் மரணம் தன்னால்தான் என்பதாலும்
அவர்கள் மீதும் வன்மம் இல்லையாம்,
பண்டமாய்ப் பார்த்த குந்தியின் மீதும்
பாத்திரமாய் எடுத்துக் கொண்ட
பாண்டவர்கள் மீதும்
அவளின் அக்னி அத்தீரம் இப்போதும்
சுற்றிக் கொண்டே திரிவதாக
எல்லோரும் பேசிக் கொண்டு திரிகிறார்கள்,
அவளின் அக்னிபுஷ்பத்தை
அடுத்த யுகத்திற்கும் நகர்த்திவிட்டு
மாகாளியாய் காத்திருக்கிறாளாம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment