
ஆடுகளின் யுத்த களத்தில்
இனவெறியின் இரத்தச் சகதிகள் ,
நரிகளின் நாட்டாமை
சமாதானத்திற்கு அழைப்பு !
முடிவதாய் இருந்த பேச்சு வார்த்தையை
முடியாமல் பார்த்துக் கொண்டது,
ஓநாய் மந்திரி !
பேச்சு வார்த்தைகள் முடியும் வரை
சிங்கங்கள்தான் சிறப்புக் காவல் !
காணாமல் போன ஆடுகளெல்லாம்
தீவிரவாதிகளென்று
சிறுத்தை யொன்று , செய்தி வாசிக்கிறது !
பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன,
ஆடுகளுக்கு வக்காலத்தாய்
கருஞ்சிறுத்தைகள் நியாயம் கேட்கின்றன ?
சிங்கங்களின், சிறப்புக் காவலை யெதிர்த்து
ஆடுகளின் எதிர்ப்புப் போராட்டம் ,
போராடும் ஆடுகளை
புரட்டிக் கடித்த சிங்கங்களைப் பாராட்டி
சிறப்பு விருந்து , ஆட்டுக் கறிகளோடு !
மேய்ப்பனைத் தேடுகின்றன ஆடுகள் !
நாட்டமை நரியின் ஆசனம்,
மேய்ப்பனின் எலும்புகளால் இழைத்திருப்பதை
எப்படியறியும் இந்த ஆட்டு மந்தைகள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment