
சரஹா மெல்லபுன்னகைத்து
என்னை அழைக்கிறாள்...
அழகின் விளிம்பில் நிற்கும் பருவம்
மிகைத்து அசத்துகிறது...
அவளை நோக்கி
காதல் பார்வை வீசியவர்களின் எண்ணிக்கை
கட்டுக் கட்டாய் விழுகிறது,
சீட்டுகளைக் குலுக்கிப் போட்டதாய்ச் சிரிக்கிறாள்,
நான்
ஜோக்கராக எதனுடனும் சேராமல்
தனித்து நிற்கிறேன்...
அவள் அரபு நாட்டுச் சுந்தரியென்று
அடையாளம் காட்ட மறுத்தபோதுதான்
அறிந்து கொண்டேன்,
அவளுக்குக் கேள்விகள் கேட்பது மிகவும் பிடிக்கும்,
பதில் சொல்லும் ஆவலில்
ரம்மியிலும் சேரமுடியாமல் தவிக்கிறேன்...
நேரங்களைப் பிடுங்கி தின்றவள்
முடியாத ஆட்டமாய்த் தொடர்கிறாள்,
அவள் யாரென்றே தெரியாமல்
கூட்டத்தோடு கூட்டமாய் நானும் தொடர்கிறேன்,
இப்போதுதான் முதன் முறையாக
தன் கை விரல்களைக் காட்சிப் படுத்துகிறாள்,
நகங்களுக்குப் பதிலாகக் கத்திகள் தீட்டப் பட்டிருந்தன,
ஆச்சரியத்தில் விக்கித்து நிற்கிறோம்,
நரசமான கேள்விகளை இப்போது
நயமின்றிக் கேட்கத் தொடங்கிவிட்டாள்,
மூளைக்குள் எறும்புகள் கூடுகட்டத் தொடங்கின,
குதறும் கேள்விகளால் எங்களின் நரம்புகளையறுத்து
இரத்தம் உறிஞ்சுகிறாள்...
சாத்தானின் வாசகங்கள்
முதலில் தேவபாஷையாகத்தான் இருக்குமென்ற...
சூஃபியின் பாடலொன்று
எங்களை உசுப்பிவிட்டுக் கடந்து போகிறது,
சரஹா எங்களைப் பார்த்து மீண்டும் சிரிக்கிறாள்
உதிரம் தோர்ந்த இதழ்களைக் கண்டு பீதியில்
விக்கித்து நிற்கும் எங்களையும் விலக்கிவிட்டு
தாம்பூலம் தரித்த இதழ்தான் அதுவென்று
ஒருக் கூட்டம்
காதல் கடிதங்களைக் கையில் வைத்துக் கொண்டு
தொடர்கிறது...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment