
நவீன ஓவியத்தின் ஒரு முனையில், நீயும்
மறு முனையில் நானும் உட்கார்ந்திருக்கிறோம்,
நடுவின் வெற்றிடத்தை
மௌனம் நிரப்பிக் கொண்டிருக்கிறது...
வண்ணங்களை நிரப்ப
தூரிகைகள் துடித்துக் கொண்டிருந்தும்
கைகளோடு
வாய்களையுமல்லவாக் கட்டிக் கொண்டோம்,
மூச்சு முட்டும் இடைவெளியில்
சிற்றோடையொன்று மெல்ல நகர்கிறது...
அஃது உன் கண்ணில் வழிந்த நீராகவும் இருக்கலாம்
என் கண்கள் வகுத்த வழியாகவும் இருக்கலாம்,
அசூசையில் மௌனம் முகம் சுளிக்கிறது,
மாயனம்புகள் நம்மிடம் களிம்பு பூசுகின்றன...
இப்போது மௌனம் வெடித்துச் சிதறுகிறது...
காற்று
நம்மின் இருக்கைகளை இடம் மாற்றி வைக்க...
ஒருவருக்கொருவருள் புதைந்து கொள்கிறோம்,
நம் மனதிற்குள் பூத்த விரல்கள்
வண்ணங்களையெல்லாம் குழைத்து
நம்மை வனத்திற்குள் அழைத்துச் செல்கிறது...
இறக்கைகளை வரைந்து பறந்து கொள்கிறோம்,
தூரிகைகளின் ஒப்பனையால்
துருவ அழகாய் நாம் ஜொலிக்கிறோம்...
பறவைகளின் க்ரீச் சப்தங்கள் நம்மை இசைக்கின்றன....
மௌனம் கழன்ற ஓவியம் அழகாகவிருப்பதாக
எல்லோரும் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment