
கார்ப்ரேட் சந்தைகளில் சிக்கிக் கொண்டு
மீளத் தெரியாமல் விழிக்கின்றவன்
வேப்பங்குச்சிகளை
விலைக்கு வாங்குகின்றான் ,
துவைத்துப் போட்டத் தூமைத் துணிகள்
மக்கும் சூழலில் ,
மக்காமல் விற்கப் படுகின்றது நாப்கின்கள் ,
வாழை இலைகளைத் தொலைத்தவன் ,
நெகிழிக் கழிவுகளைச்
சூட்டோடு சாப்பிடுகிறான்,
வேது பிடிப்பை மறந்து போனவன் ,
மருத்துவ மனைகளில் காத்துக் கிடக்கின்றான் ,
உடல் களைப்பின் கசாயம்
உவ்வ்வே ஆகி விட்டது ,
சுத்திகரித்த எண்ணெய்களில்
சுத்த கொழுப்பைத் தொலைத்தவன்,
கடலை எண்ணெய்களை
கார்ப்ரேட் சந்தைகளில் தேடுகின்றான் ,
ஆனாலும், வாங்கும் விலைகளில்தான்
அவைகளில்லை ...
நோய் நாடி, நோய் முதல் நாடி மறந்தவன்,
நோய் தேடி நோய் முதல் தேடி அலைகின்றான் ,
இன்னமும் சில காலங்களில்
சுவாசத்தை விலைக்கு வாங்குவான்,
ஏழைகள் அப்போது இருக்கவே மாட்டார்கள்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment