Friday, 18 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 38

Image may contain: 1 person, hat
.
வயிறு தடவி,தலை சொறிந்து 
குழைந்து நின்று எல்லைமீறி 
கை ஏந்தும் யாசகனை 
சபிக்க மனமின்றி 
கேட்டவனின் பசியுணர்ந்த பாரி 
வாரி இறைக்கிறான் வள்ளலென 

ஊடகங்களில் ஈடேறும் தகவலால் 
திருப்தியூறும் தனவான் அவன் 
அவனுக்கு தெரியாது 
அது போய்ச் சேரும் புலம் பற்றி.. 

இடை தரகர்களால் நிர்ணயிக்கப் பட்டபின் 
பகுதியாயோ,நான்கில் ஒன்றாயோ 
வந்தடையும் இழுபறிக்குப் பின் 

ஊருக்குள் வந்திறங்கும் 
இயற்கை அனர்த்தங்களை தவிர 
மற்ற எல்லாவற்றையும் 
பாகு பாடுகள்தான் பங்கிடுகின்றன 

குடும்ப நலம்களில் மிக அக்கறையுடன் 
நேசத்துக்குரியவனாகி 
குழிக்குள் அடங்கியவனையும் கூட்டி வந்து 
தேவையான அளவு முத்திரைகளை 
குத்திவிடுகின்றான் பணியாளி 
அவனது வட்டம் பயனுற 
பசியோடு இருப்பவனின் வயிற்றெரிச்சல் 
அவனுக்கொரு மயிரு 

நாற்புறமும் துயர் சூழ ஏதுமின்றி 
ஜீவிதம் ஒன்றிற்காய் போராடும் 
வாழ்வாதாரமற்றவனிடம் 
துருத்திக் கொண்டு 
தொக்கி நிற்கும் பெருங் கேள்வி யாதெனில்; 
அடங்கிய பின் எல்லோரையும் 
ஒரே மண்ணில் அடக்கி விடுவதில்தான் 
வேறுபாடு இல்லாமல் இருக்கின்றன என்பதே! 

ரோஷான் ஏ ஜிப்ரி (இலங்கை.)


No comments:

Post a Comment

Popular Posts