Saturday, 12 August 2017

சுதந்திரம் கிடைத்ததா?

Image may contain: 1 person, text

ஒற்றைத் துணியில் இடை மறைத்து 
தெருவினோரம் சற்றே யுறங்கும் 
எம் தோழனைக் கேட்டுப் பார், 
சுதந்திரம் கிடைத்ததா ? 

பட்டயம் படித்து விட்டுப் பாழ்வெளியில் 
வெட்டைத் தெரு நாயாய் வீதியிலலையும் 
எம் சோதரனைக் கேட்டுப் பார், 
சுதந்திரம் கிடைத்ததா? 

தொட்டி மலமள்ளும் பாழ் நிலை மாறாமல் 
கெட்டதொரு புழுவாய் தினம் சாகும் 
எம் நண்பனை நீ,கேட்டுப் பார், 
சுதந்திரம் கிடைத்ததா ? 

நட்ட வயலை நடு இரவில் பறித்து 
வெட்ட வெளியில் விடுபட்டுத் தவிக்கும் 
எம் உழவனையும் கேட்டுப் பார், 
சுதந்திரம் கிடைத்ததா ? 

ஒற்றைக் கொடியேற்றி ,மிட்டாய் கொடுத்து 
சிட்டாய்ப் பறக்கும் மந்திரியே,இன்னமும் 
பட்டா இல்லாமல் வாழும் 
எம் பாழ் ஏழைகளையும் கேட்டுப் பார், 
சுதந்திரம் கிடைத்ததா? 

முட்டாள் தேசமென்றே முணங்கித் திரியும் 
ஆள்பவரே , 
இவர்கள் ஒட்டாக முடிவெடுத்து 
இனியுமொரு சுதந்திரக் கொடி பிடித்தால் 
நீங்களும்தான் அன்னியரே ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts